Ad Widget

112 ஆவது வடக்கின் பெரும் போர் நேற்று ஆரம்பம்!!

வடக்கின் பெரும் போர் என வர்ணிக்கப்படும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மற்றும் சென் ஜோன்ஸ் கல்லூரி அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டி நேற்று வியாழக்கிழமை காலை ஆரம்பமானது.

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் ஆரம்பமான இந்தப் போட்டி இரண்டு கல்லூரிகளுக்கும் இடையேயான நூற்றாண்டு கடந்த 112ஆவது போட்டியாகும்.

இதுவரை நடந்து முடிந்த 111 ஆட்டங்களில் 40 போட்டிகள் சமநிலையில் முடிவடைந்ததுடன் சென் ஜோன்ஸ் கல்லூரி 36 போட்டிகளிலும் யாழ். மத்திய கல்லூரி 27 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. எஸ்.தசோபன் தலைமையில் யாழ் மத்திய கல்லூரி அணியினரும் வி.ஜதுசன் தலைமையில் நடப்பு சம்பியன சென் ஜோன்ஸ் கல்லூரியினரும் 112வது போட்டியில் களம் இறங்கியுள்ளனர்.

யாழ். மத்திய கல்லூரி அதிபர் எழில் வேந்தன் மற்றும் சென் ஜோன்ஸ் கல்லூரி அதிபர் ஞானபொன்ராஜா ஆகியோர் தலைமையில் நேற்று காலை யாழ் மத்திய கல்லூரி மைதானத்தில் வீர்ர்கள் அறிமுகம் மற்றும் நாணயச்சுழற்சி இடம்பெற்றன.

நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற யாழ் மத்திய கல்லூரி அணி தலைவர் எஸ்.தசோபன் களத்தடுப்பை தேர்வு செய்தார். இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய சென் ஜோன்ஸ் கல்லூரி அணி 77.1ஓவர்களில் 217 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்தது.

துடுப்பாட்டத்தில் அணியின் ஆரம்ப ஆட்டக்காரராகக் களமிறங்கிய வீரர் செரூபன் சிறப்பாக ஆடி 65 ஒட்டங்களைப் பெற்றார். மற்றொரு ஆட்டக்காரரான எல்சான் 32 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டார். இந்த நிலையில் மத்திய கல்லூரி அணி சார்பில் பதிலுக்கு துடுப்பெடுத்தாட றியாஸ்கான் மற்றும் ஜெயதர்சன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.

எனினும் றியாஸ்கான் ஐந்து ஓட்டங்களுடன் ஆட்டமிழந்த நிலையில் நேற்றய ஆட்டநேர முடிவின்போது யாழ். மத்திய கல்லூரி அணி 16 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 43 ஓட்டங்களை பெற்றுள்ளது.

இரண்டாம் நாள் ஆட்டம் இன்று காலை 9 மணிக்கு ஆரம்பமாகும்.

Related Posts