Ad Widget

10 இலட்சம் மீனவர்கள் இணைந்து போராட்டம் நடத்த தீர்மானம்

Board-race-velanaiஇந்திய மீனவர்களினால் இலங்கை மீனவர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணாவிட்டால் 10 இலட்சம் மீனவர்கள் ஒன்றிணைந்து மாபெரும் ஆர்ப்பாட்டத்தினை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக யாழ். மாவட்ட கிராமிய கடற்றொழிலாளர் சங்க தலைவர் நாகநாதி பொன்னம்பலம் தெரிவித்தார்.

இலங்கை இந்திய மீனவர்களின் பேச்சுவார்த்தை நிறுத்தப்பட்டுள்ள நிலையில், இது தொடர்பில் அவருடன் தொடர்பு கொண்டு கேட்டபொழுதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

‘இந்திய மீனவர்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான ஒப்பந்தத்தினை தமிழ்நாடு அரசு மீறியுள்ளது. இலங்கை அரசு, இந்திய அரசாங்கத்திற்கு போதுமான அளவு விட்டுக் கொடுப்புக்களைச் செய்துள்ளது. ஆனால் அதனை தமிழ்நாட்டு அரசாங்கம் தவறாகப் பாவித்துள்ளது.

இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் படி கச்சதீவு இலங்கைக்குரியது. அந்தவகையில், யாழ். ஆயரின் கீழ் கச்சதீவு உற்சவம் இடம்பெற்று வருகின்றது.

தமிழ்நாட்டு முதலமைச்சர் ஜெயலலிதா தற்போது அரசியல் பித்தலாட்டம் செய்கின்றார். சுமார் 40 வருடங்களின் பின்னர் கச்சதீவினை சொந்தமாக்குவதற்கான நாடகத்தினை நடத்திவருகின்றார். அந்த நாடகத்தினை நாங்கள் ஏற்றுக் கொள்ள மாட்டோம்.

இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழையும் போது, பல சந்தர்ப்பங்களில் அவர்களுக்கான நீதிகள் வழங்கப்பட்டன.

அவ்வாறு இருக்கும் பட்சத்தில், அத்துமீறல் சம்பவங்கள் தொடர்ச்சியாக இடம்பெறுவதை வடபகுதி மீனவர்கள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்.

மீனவர்களின் அத்துமீறல் மற்றும் இந்திய, இலங்கை மீனவர்களின் பேச்சுவார்த்தை நிறுத்தப்பட்டதை வடமாகாண மீனவர்களாகிய நாம் வன்மையாக கண்டிக்கின்றோம்.

எது எவ்வாறாயினும், வடமாகாண மீனவர்கள் 10 இலட்சம் பேர் ஒன்றிணைந்து மாபெரும் போராட்டம் ஒன்றினை மேற்கொள்ளத் தீர்மானித்துள்ளோம்.

அதன் பிரகாரம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (28) ஆர்ப்பாட்டத்தினை மேற்கொள்வதற்கான ஆரம்பக் கலந்துரையாடல் ஒன்றினை மேற்கொள்ள தீர்மானித்துள்ளோம். அன்றைய கலந்துரையாடலின் போது, ஆர்ப்பாட்டத்தினை மேற்கொள்வதற்கான காலம், நேரம் என்பன தீர்மானிக்கப்படும்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 75 வீதமான மீனவர்கள் கலந்து கொள்வார்கள் என்ற நம்பிக்கை இருக்கின்றது.

மீனவர்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு இலங்கை அரசு திடமாக இருப்பதுடன் அமைச்சர் ராஜித சேனாரட்ணவும் உறுதியாகவும் ஒத்துழைப்புடனும் இருக்கின்றார்’ என அவர் மேலும் தெரிவித்தார்.

Related Posts