Ad Widget

வித்தியா கொலை செய்யப்பட்டு இன்றுடன் ஓராண்டு பூர்த்தி

யாழ்ப்பாண மக்களிடையே பெரும் கொந்தளிப்பை அல்லது சமூகப் பயத்தை ஏற்படுத்திய, புங்குடுதீவு மாணவி வித்தியா வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டு, படுகொலை செய்யப்பட்ட சம்பவம் இடம்பெற்று இன்றுடன் ஒரு வருடம் நிறைவடைகின்றது.

2015ஆம் ஆண்டு மே மாதம் 13ஆம் திகதி பாடசாலைக்குச் சென்ற வித்தியா கடத்தப்பட்டு, பாலியல் வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார். அவரது சடலம் மறுநாள் காலையில் பற்றைக்குள் இருந்து மீட்கப்பட்டதையடுத்து, ஊர்காவற்றுறை பொலிஸாரால் விசாரணை தொடங்கப்பட்டது.

இந்தச் சம்பவம் தொடர்பில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உட்பட அடுத்தடுத்து 9 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு, இன்றுவரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

மாணவியின் சந்தேகநபர்களை 2015ஆம் ஆண்டு மே மாதம் 20ஆம் திகதி யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தச் சென்ற போது, அங்கு ஒன்றுகூடிய ஆர்ப்பாட்டக்காரர்களால் நீதிமன்றம் தாக்குதலுக்குள்ளானது. நீதிமன்றம் மாத்திரமின்றி சிறைச்சாலை வாகனம், சட்டத்தரணிகளின் கார் மற்றும் யாழ்ப்பாணம் நகர்ப் பகுதியில் அமைந்துள்ள பொலிஸ் காவலரண் ஒன்றும் உடைக்கப்பட்டது.

இந்தச் சம்பவம் தொடர்பில் நூற்றுக்கும் அதிகமானவர்கள் கைது செய்யப்பட்டு, படிப்படியாக பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

மாணவியின் கொலை வழக்கு, ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்ததுடன் ஊர்காவற்றுறை பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணை, அதன்பின்னர் குற்றப்புலனாய்வு பொலிஸாருக்கு மாற்றப்பட்டது.

அதனையடுத்து, இன்னும் சில சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதுடன் இதுவரை 13 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 13ஆவது சந்தேகநபர் கடந்த வாரம் கைது செய்யப்பட்டிருந்தார்.

வழக்கின் முக்கிய ஆதாரமாகக் கருதப்படும் டி.என்.ஏ பரிசோதனையானது இன்னமும் குற்றப்புலனாய்வு பொலிஸாரால் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை. பரிசோதனைகளை மேற்கொண்ட ஜின்டெக் நிறுவனம், அறிக்கையைத் தரவில்லை என குற்றப்புலனாய்வு பொலிஸார் மன்றில் கூறியிருந்தனர்.

எனினும், நிறுவனத்துக்கு பரிசோதனைக்காக கட்டவேண்டிய பணம் கட்டாமையால் அறிக்கை தாமதமானது என நிறுவனத்தால் தெரிவிக்கப்பட்டது. அடுத்த வழக்குத் தவணையில் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேலும், ஒரு வழக்கின் சந்தேகநபர்களை நீதவான் நீதிமன்றத்தால் ஒரு வருடத்துக்கு மேல் விளக்கமறியலில் வைக்க முடியாது. ஆனால், வழக்கு விசாரணையானது இன்னமும் முடியாத காரணத்தால் மேலும் 3 மாதகாலத்துக்கு சந்தேகநபர்களை விளக்கமறியலில் வைத்து, வழக்கை விசாரிப்பதற்கு அனுமதி கோரி சட்டமா அதிபர் திணைக்களத்தால் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

கடந்த செவ்வாய்க்கிழமை (11), மனுவை விசாரித்த யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன், சந்தேகநபர்களை தடுத்துவைக்க அனுமதி வழங்கியிருந்தார்.

இந்த வழக்கின் சான்றுப்பொருட்களின் பகுப்பாய்வு அறிக்கை, குற்றப்புலனாய்வுப் பொலிஸாரின் முழுமையான விசாரணை அறிக்கை, வழக்கில் சந்தேகப்படும்படி விடயங்களை தெளிவுபடுத்தும் அறிக்கை என்பன நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவேண்டும்.

பாதிக்கப்பட்ட மாணவியின் குடும்பத்தினர் தொடர்ந்தும் புங்குடுதீவில் இருப்பது பாதுகாப்பில்லை என்பதை கருத்திற்கொண்டு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஏற்பாட்டில் வவுனியாவில் வீடு அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது.

புங்குடுதீவு மாணவி கொலை செய்யப்பட்டதன் பின்னர் 2015ஆம் ஆண்டு செப்டெம்பர் 11ஆம் திகதி இடம்பெற்ற கெட்டதெனியாவ சேயா சந்தவமி என்ற சிறுமியின் கொலை தொடர்பில் 184 நாட்களில் தீர்ப்பு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related Posts