Ad Widget

முன்னாள் போராளிகளுக்கு இடமில்லை என புலிப் போர்வையாளிகள் தெரிவிக்கின்றனர் – டக்ளஸ்

புலிப் போராளிகளுக்கு எதிர்வரும் தேர்தலில் ஆசனங்கள் ஒதுக்க இயலாது என புலிப் போர்வையாளிகள் கூறியுள்ளனர் என ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நேற்றய தினம் முன்னாள் புலிகள் இயக்க உறுப்பினர்கள் சிலரைச் சந்தித்துக் கலந்துரையாடிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பில் மேலும் கருத்துத் தெரிவித்த அவர், “புலிகள் இயக்க முன்னாள் போராளிகள் தற்போது ஜனநாயக நீரோட்டத்தில் வாழ்ந்து வருகின்றனர். எனினும், இவர்களது பொருளாதார நிலை மேலும் கட்டியெழுப்பப்பட வேண்டியுள்ளதுடன் இவர்களுக்கான வாழ்வாதாரத்தை அமைத்துக் கொடுப்பதும் எமது பாரிய பொறுப்பாகும்” என்றார்.

“இந்நிலையில், இப்போராளிகளில் சிலர் ஒன்றிணைந்து ஜனநாயக போராளிகள் கட்சியினை தோற்றுவித்துள்ள நிலையில், எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் புலிகளால் உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் தங்களுக்கு ஆசனங்களை ஒதுக்கித் தருமாறு கோரியிருந்தனர். இக்கோரிக்கையை புலிகளின் பெயரைக் கூறி அரசியல் செய்து வரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிராகரித்துள்ளது.

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் நடைமுறைச்சாத்தியமான அரசியல் செயற்பாடுகளால் தங்களது இருப்பிற்கு குந்தகம் ஏற்பட்டு விடும் என அஞ்சிய புலிகள், தேர்தல்களில் தனித்துப் போட்டியிட்டு, படுதோல்வியைத் தழுவிக் கொண்டிருந்த, சில உதிரிக் கட்சிகளை இணைத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உருவாக்கியதை எவரும் மறந்திருக்கமாட்டார்கள்.

எனவே, முன்னாள் போராளிகளுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் ஆசனங்களைக் கேட்பதற்கான உரிமை உண்டு. இந்த உரிமையை புலிப் போர்வையாளிகளான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் மறுத்துள்ளதுடன், முன்னாள் புலிப் போராளிகளின் பின்னால் இராணுவப் புலனாய்வுப் பிரிவு இருப்பதாக ஒரு கதையையும் கட்டிவிட்டுள்ளனர்.

இந்த அரசின் பின்னால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஓடிப்பாடி தங்களுக்காக உழைத்துவரும் நிலையில், இப்படியொரு கதை கட்டி விடப்பட்டுள்ளது.

இதேநேரம், ஜனநாயகப் போராளிகள் கட்சியில் ஒரு ஊடகவியலாளரும் இருப்பதால், இவருக்கு உறவான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடக உரிமையாளர் ஒருவர், போராளிக் கட்சிக்கு ஆசனங்களைக் கொடுக்கக் கூடாது என்பதில் பிடிவாதமாக இருப்பதாகவும் கூறப்படுகின்றது.

எதுவாயினும், புலிகளால் வாழ்ந்து வரும் ஒரு கட்சி, முன்னாள் புலிகள் இயக்கப் போராளிகளை புறந்தள்ளியிருப்பது புலிகளுக்கு இவர்கள் செய்துள்ள துரோகமாகும்” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related Posts