Ad Widget

வைத்தியசாலைகள், பொது இடங்களுக்கு செல்வோருக்கு தடுப்பூசி பெற்றிருப்பது இனிமேல் அவசியப்படலாம்!!!

இனிமேல் வைத்தியசாலைகளுக்கும், பொது இடங்களுக்குச் செல்வதற்கும், பொது போக்குவரத்துகளில் பயணிப்பதற்கும் தடுப்பூசி ஏற்றிக் கொள்வது கட்டாயமாக்கப்படலாம். எனவே வடக்கு மாகாணத்தில் இதுவரை கோவிட்-19 தடுப்பூசி ஏற்றுக்கொள்ளாத 30 வயதிற்கு மேற்பட்ட அனைவரையும் உடனடியாக தடுப்பூசியை பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

இவ்வாறு வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

இலங்கை முழுவதும் தற்போது கோவிட்-19 நோயானது மிகத் தீவிரமாக பரவி வருகின்றது. இறப்புக்களின் எண்ணிக்கையும் அதிகரித்து செல்கின்றது. இறந்தவர்களில் பெரும்பாலானவர்கள் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ள தவறியவர்களாக காணப்படுகின்றனர்.

இந்த நிலையில் இப்பரம்பலை கட்டுப்படுத்த பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள மூன்று வழிகளே உள்ளன.

முதலாவதாக அவசியமற்ற ஒன்றுகூடல்களை, விழாக்களை தவிர்த்துக்கொள்ளுதல். அவசியமின்றி வீடுகளுக்கு வெளியே வருவதை தவிர்த்துக் கொள்ளுங்கள். வணக்கஸ்த்தலங்களில் இடம்பெறும் நிகழ்வுகளை உட்பிரகாரங்களில் மட்டும் மட்டுப்படுத்தப்பட்ட பக்தர்களுடன் மட்டுமே நடாத்த அனுமதி வழங்கப்படுகின்றது.

அண்மைக்காலமாக பல ஆலயங்களில் நடந்த திருவிழாக்கள் மூலம் கோரோனா தொற்று மிக வேகமாக பரவியதை சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

இரண்டாவதாக பொதுமக்கள் பொது இடங்களுக்கு செல்கின்ற வேளைகளில் சுகாதார நடைமுறைகளை இறுக்கமாக பின்பற்ற வேண்டும். முகக்கவசங்களை சரியான முறையில் அணிந்திருக்க வேண்டும். கைகளை கிரமமாக தொற்று நீக்கம் செய்ய வேண்டும். சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும்.

மூன்றாவதாக பொதுமக்கள் கட்டாயமாக தமக்குரிய தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ள வேண்டும். தற்போது யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா ஆகிய மாவட்டங்களில் சினோபாம் முதலாவது தடுப்பூசி ஏற்றும் பணிகள் இடம்பெற்று வருகின்றன. நேற்று (04.08.2021) மாலை வரை வடமாகாணத்தில் 4 லட்சத்து 62 ஆயிரத்து 771 பேருக்கு முதலாவது தடுப்பூசி வழங்கப்பட்டது.

இது வடமாகாணத்தில் உள்ள 30 வயதிற்கு மேற்பட்ட சனத்தொகையில் 70 வீதமாகும். நேற்று மாலை வரை யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 243,400 (70%) பேரும், கிளிநொச்சி மாவட்டத்தில் 48,564 (67%) பேரும், மன்னார் மாவட்டத்தில் 52,532 (67%) பேரும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 45,032 (69%) பேரும், வவுனியா மாவட்டத்தில் 73,243 (74%) பேரும் முதலாவது தடுப்பூசியைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.

வடமாகாணத்தில் இன்னமும் 30 வயதிற்கு மேற்பட்ட ஏறத்தாழ 2 லட்சம் பேர் முதலாவது தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ள வேண்டியுள்ளது.

தற்போது உள்ள தீவிரமான கோரோனா பரம்பல் சூழ்நிலையில் பரம்பலை கட்டுப்படுத்தவும், இறப்புக்களை குறைக்கவும் எம்மிடம் உள்ள முக்கியமான உபாயம் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்வதே.

இனிமேல் வைத்தியசாலைகளுக்கும், பொது இடங்களுக்குச் செல்வதற்கும், பொது போக்குவரத்துகளில் பயணிப்பதற்கும் தடுப்பூசி ஏற்றிக் கொள்வது கட்டாயமாக்கப்படலாம். எனவே இதுவரை தடுப்பூசி ஏற்றுக்கொள்ளாத 30 வயதிற்கு மேற்பட்ட அனைவரையும் உடனடியாக தடுப்பூசியை பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

மருத்துவர் ஆ. கேதீஸ்வரன்
மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர்
வடமாகாணம்

Related Posts