Ad Widget

வெள்ளை வானில் கடத்தப்பட்டவர்கள் கொல்லப்பட்டனர்! கடத்தல்காரர்களை கோட்டாவே இயக்கினார்!!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் வெள்ளை வான்களில் கடத்தப்பட்டவர்கள் கொலைசெய்யப்பட்டு கடலில் மூழ்கடிக்கப்பட்டனர் என்று முன்னாள் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரசாந்த ஜயக்கொடி தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளிடமிருந்து பிளவடைந்த போராளிகளையும் கடந்த அரசு இந்தக் கொலைகளுக்காக பயன்படுத்திக்கொண்டது என்று அவர் கூறியுள்ளார்.

கடந்த அரசின் அரசியல்வாதிகள், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோர் சட்டத்தை கையில் எடுத்து எதேச்சாதிகார போக்கில் செயற்பட்டனர் என்றும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

இந்தக் குற்றச் செயல்களை நியாயப்படுத்துமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளராகக் கடமையாற்றிய காலத்தில் தமக்கு அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டன என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

“இதனை எதிர்த்த காரணத்தினால் மட்டக்களப்புக்கு இடமாற்றம் செய்து அங்கு ஓர் ஆயுதக் குழுவைக்கொண்டு என்னைக் கொலைசெய்ய திட்டமிடப்பட்டிருந்தது” – என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

“இதன் காரணமாகவே நாம் நாட்டை விட்டு வெளியேறிச் சென்றோம்” என்றும் அவர் கூறியுள்ளார்.

கடந்த காலங்களில் மக்களின் ஆயுட் காலத்தை மஹிந்தவும், கொட்டாபயவுமே தீர்மானித்தனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வெள்ளைவான் கடத்தல் கும்பல் நேரடியாக பாதுகாப்பு அமைச்சின் கீழ் செயற்பட்டது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கொலன்னாவ நகரசபைத் தலைவரைக் கடத்த இந்தக் குழுவினரே கடந்த காலத்தில் சென்றிருந்தனர் எனவும், அவர்களை மக்கள் மடக்கிப் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்த போது, அப்போது மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேனாநாயக்க அவர்களை விடுதலை செய்தார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்கள் தொடர்ந்தும் கடமையில் ஈடுபட்டு வருகின்றனர் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related Posts