Ad Widget

வெள்ளை கொடியை காண்பித்த போதிலும் இலங்கை இராணுவம் அவர்களை சுட்டுக்கொன்றது- நவநீதம் பிள்ளை

இலங்கையின் இறுதி யுத்தத்தின்போது, வெள்ளை கொடியை காண்பித்தவர்களையும் இலங்கை இராணுவம் சுட்டுக்கொல்வதை பார்த்திருக்கின்றோம் என முன்னாள் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் நவநீதம் பிள்ளை தெரிவித்துள்ளார்

ஜெனிவாவில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை கூட்டத்தொடர் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது நவநீதம் பிள்ளை மேலும் கூறியுள்ளதாவது, “இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் இறுதி ஆறுமாதங்களும் பலமுறை சர்வதேச தொலைக்காட்சிகளில் வெளியாகியுள்ளன.

மேலும் நாங்கள் பயங்கரவாத அமைப்பாக கூறுகின்ற விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர்கள் என குற்றம்சாட்டப்படுபவர்களை இலங்கை இராணுவம் அவர்கள் வெள்ளை கொடியை காண்பித்தவேளையிலும் சுட்டுக்கொல்வதை பார்த்திருக்கின்றோம்.

அதேபோன்று பொதுமக்கள் மீதான கடுமையான விமான குண்டுவீச்சுகளையும் அவர்கள் அடைக்கலம் கோரிய இடங்கள் அழிக்கப்பட்டதையும் நாங்கள் பார்த்திருக்கின்றோம்.

மேலும், காயமடைந்தவர்களிற்கு சிகிச்சை அளித்துக்கொண்டிருந்தவேளை எறிகணை தாக்குதலிற்கு உள்ளான வைத்தியசாலைகளில் வைத்தியர்களின் உதவிக்கான இறுதிக்குரலை நாங்கள் செவிமடுத்திருக்கின்றோம்.

இதேவேளை இலங்கை நீதி மற்றும் பொறுப்புக்கூறலிற்கான மனித உரிமை ஆணையாளரின் பரிந்துரைகளை ஏற்றுக்கொள்ளவேண்டும்

மேலும் தமிழர்களிற்கு எதிரான கடுமையான மனித உரிமை மீறல் குற்றவாளிகளை எந்தவித தயக்கமும் இன்றி பொறுப்புக்கூறலிற்கு உட்படுத்தவேண்டும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Posts