மன்னார் உயிலங்குளம் புதுக்குடியிருப்பு கிராமத்திற்கு வெள்ளை காரொன்றில் வந்தவர்கள், முன்னாள் போராளியொருவரை கடத்த முயற்சித்ததுடன், துப்பாக்கிச்சூடும் நடத்தியுள்ளனர்.
நேற்று முன்தினம் (வியாழக்கிழமை) இரவு குறித்த சம்பவம் இடம்பெற்றிருந்த நிலையில், இவ்வாறு வெள்ளை காரில் வந்தவர்கள் கொழும்பில் இருந்து வருகை தந்த அரச புலனாய்வுத்துறையினர் என தகவல் வெளியாகியுள்ளது.
சிவில் உடையில் வந்த எட்டு பேர் கொண்ட குழுவினர், குறித்த பகுதியை சேர்ந்த முன்னாள் போராளியான விவசாயியை பிடித்து செல்ல முற்பட்டுள்ளனர். அதன்போது துப்பாக்கியுடன் வந்த குழுவினருக்கும், முன்னாள் போராளி மற்றும் அவர்களின் உறவினர்களுக்கும் இடையில் தர்க்க நிலை ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து குறித்த குழுவினர் சரமாரியாக துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
போராளியின் உறவினர்கள் தொடர்ந்து தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து, குறித்த குழுவினர் காரில் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
இது குறித்து உடனடியாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் மற்றும் பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கம் ஆகியவற்றிற்கு தகவல் வழங்கியுள்ளனர்.
அதனை தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் மற்றும் மன்னார் பொலிஸார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து நிலைமையை ஆராய்ந்துள்ளனர்.