Ad Widget

வெளியுறவுக் கொள்கைகளை பலப்படுத்த பல முனைகளில் செயற்பட வேண்டும் – சர்வேஸ்வரன்

tnaதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெளியுறவுக் கொள்கைகளை சர்வதேச அரசியலில் தமிழ் மக்களின் நலனை நோக்கி நகர்த்துகின்ற பணியை செய்யும் வகையில் செயற்படுத்த பல முனைகளில் செயற்பட வேண்டும் என வடமாகாணசபை உறுப்பினர் கந்தையா சர்வேஸ்வரன் தெரிவித்தார்.

இலங்கைக்கு எதிரான ஜெனீவா தீர்மானத்தில் நகல் வெளியிட்டுள்ள நிலையில், அதன் நிலைப்பாடு குறித்து யாழ். ஊடக அமையத்தில் நேற்று நடைபெற்ற கலந்துரையாடலின்போதே அவர் இவ்வாறு கூறினார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

‘வெளியிட்டுள்ள நகலின் தீர்மானத்தின்படி ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் அங்கீகரிக்கப்பட்ட விசாரணை என்பது வேறு. அத்துடன் நகலின் விமர்சனங்கள் 5 நாடுகளின் பிரேரணையாக வெளிவந்துள்ளதால், பல வகையான விமர்சனங்களில் பார்க்கமுடியும்.

இந்தத் தீர்மானத்தினை இலங்கை அரசு முழுமையாக நிராகரித்து வருகின்றது. அந்த வகையில், இன்று வெளியிட்டுள்ள நகலில் இலங்கையிலுள்ள எல்லா இனத்தவர்களுக்கும் எல்லா மதத்தவர்களுக்கும் எல்லா மாகாணங்களுக்கும் ஒவ்வொரு விடயங்களையும் இலங்கை முழுவதிலும் அமுல்படுத்தப்பட வேண்டுமென்று குறிப்பிடப்பட்டுள்ளதுடன், விசேடமாக வடமாகாணத்திற்கு என்று குறிப்பிடப்படவில்லை, அத்துடன், அந்த விடயங்கள் தமிழ் மக்களுக்கு அல்ல.

இவ்வாறு இருக்கும் பட்சத்தில் ஐ.நா. சர்வதேச விசாரணையை ஏற்படுத்தக்கூடும் என்றும் ஜெனீவாவில் அதிசயம் நடக்கக்கூடும் என்று பார்க்கக்கூடாது.

மேலும், ஐ.நா. தலையீடுகள் எமது பக்க நியாயத்தின் பலம். அந்த நியாயத்தினை ஒன்றுபட்டு ஏற்று நிற்பது எமக்கு இன்னொரு பலம்.

எமது நீதி சர்வதேசத்தில்  கேட்கப்படும் என நம்பி சர்வதேசத்திற்கு குரல் கொடுக்கின்றோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் 5 பேர் கையெழுத்திட்டு மகஜர் ஒன்றினை அனுப்பியுள்ளனர்.

ஜெனீவா தீர்மானத்தினை நிறைவேற்ற இலங்கை அரசு தடைகள் போட்டாலோ, தயக்க காட்டினாலோ வேறு சில நாடுகள் வெவ்வேறு விதமான கட்டுப்பாடுகளை போடும்.

அத்துடன், தற்போது இந்தியாவில் நடைபெறவுள்ள லோக்சபா தேர்தலில் தமிழ்நாட்டின் பிரதான கட்சிகளான அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. ஆகிய இரு கட்சிகளில் ஒரு கட்சி வெற்றி பெற்றால் அவற்றிற்கு இந்திய வெளியுறவு அமைச்சுக் கிடைக்கும். அ.தி.மு.க. வெற்றி பெற்றால் இலங்கை பிரச்சினையில் செல்வாக்கு செலுத்துவதுடன், அடுத்த கட்ட நகர்வுகளை பலப்படுத்த முடியுமென நினைக்கின்றேன்.

இவ்வாறு இருக்கக்கூடிய சர்வதேச பிராந்திய அரசியல் சூழ்நிலையில், எதிர்காலத்தில்  சாத்தியமான வாய்ப்புக்கள் என்ன என பார்க்கலாம். அந்த வகையில், சர்வதேச சமூகம் நகர்த்தும் காய்களாக இருந்து கொள்ளக்கூடாது.  எவ்வாறு காய்களை நகர்த்துவதற்கு என்னென்ன வேலைத்திட்டங்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கையாள வேண்டுமென்று கையாண்டால், வெளியுறவுக் கொள்கைகளுக்கான செயல்வடிவத்தினை பல முனைகளில் எடுக்க முடியும்.

அதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் வல்லுனர்கள் உட்பட பலதரப்பட்டவர்களும் இணைந்து செயற்பட வேண்டும்’ என்றார்.

Related Posts