Ad Widget

வெற்றி வாகை சூடியது ஆப்கான்

முஹமட் ஷஷாட், ஸ்ரனிகாஷியின் ஆரம்ப அதிரடி ஆட்டம் கைகொடுக்க ஸ்கொட்லாந்து அணியை 14 ஓட்டங்களால் வீழ்த்தியது ஆப்கானிஸ்தான்.

mohammed20160309

ருவென்ரி- 20 உலகக்கிண்ணக் கிரிக்கெட் தொடர் நேற்று இந்தியாவில் ஆரம்பமானது. இதில் ஐ.சி.சி. தரவரிசையில் முன்னிலை வகிக்கும் இலங்கை, இந்தியா உள்ளிட்ட 8 அணிகள் சுப்பர்-10 சுற்றுக்கு நேரடியாகத் தகுதி பெற்றுவிட்டன. மீதமிருக்கும் இரு இடங்களையும் பிடிக்க பங்களாதேஷ், சிம்பாவே உள்ளிட்ட 8 அணிகள் தகுதிச் சுற்றில் மோதுகின்றன.

இதில் நேற்று நடந்த இரண்டாவது ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான், ஸகொட்லாந்து அணிகள் நாக்பூரில் மோதின. நாணயச்சுழற்சியில் வென்ற ஆப்கானிஸ்தான் துடுப்பெடுத்தாடியது.

ஆலி ஷட்ரன் 17 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க, முஹமட் ஷஷாட் உடன் இணைந்து ஸ்ரனிகாஷி அபாரமாக ஆடினார். ஸ்கொட்லாந்தின் பந்துவீச்சை அநாயசமாக எதிர்கொண்டு இருவரும் அதிரடி காட்டினர். இதனால் அணியின் ஓட்ட எண்ணிக்கை வேகமாக உயர்ந்தது. 5 பௌண்ட்ரிகள், 3 சிக்ஸர்களை விளாசிய ஷஷாட் 61 ஓட்டங்களைக்குவித்து ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து வந்த குல்பதின் நய்ப் 12, முஹமட் நபி 1, சபிகுல்லா 14 ஓட்டங்களுடன் வெளியேறினர்.

20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்களை இழந்த 170 ஓட்டங்களைப் பெற்றது ஆப்கானிஸ்தான். ஸ்ரனிகாஷி 2 பௌண்ட்ரிகள், ஒரு சிக்ஸருடன் 55 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்றார்.

ஸ்கொட்லாந்தின் பந்துவீச்சில் வட், டவே, எவன்ட்ஸ் ஆகியோர் ஒவ்வொரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.

ஸ்கொட்லாந்துக்கு தொடக்கம் கொடுத்த முன்சே, கோட்ஷர் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். கோட்ஷர் 4 பௌண்ட்ரிகள், ஒரு சிக்ஸருடன் 40, முன்சே 9 பௌண்ட்ரிகளுடன் 41 ஓட்டங்களுடன் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். ஒரு கட்டத்தில் இலகுவாக வெற்றி பெற்றுவிடும் என்ற நிலையில் இருந்த ஸ்கொட்லாந்துக்கு இந்த இணையின் ஆட்டமிழப்பு ஏமாற்றத்தைக் கொடுத்தது.

பின்னர் வந்தவர்களில் மக்கன் மட்டுமே அதிக ஓட்டம் (36) பெற்றார்.

20 ஓவர்கள் நிறைவில் ஸ்கொட்லாந்து 5 விக்கெட்களை இழந்து 156 ஓட்டங்களைப் பெறறு 14 ஓட்டங்களால் தோல்வியைத் தழுவியது.

ஆப்கானிஸ்தானின் பந்துவீச்சில் ரசீட் கான் 2 விக்கெட்களை வீழ்த்தினார்.

ஆட்டநாயகனாக முஹமட் ஷஷாட் தெரிவானார்.

Related Posts