வெசாக் தினத்தில் சிங்கள பௌத்தர்களுக்கு தமிழர்களிடருந்து ஒரு கோரிக்கை!!

வடக்கில் தமிழ் மக்களிடமிருந்து வலுக்கட்டாயமாக கையகப்படுத்தி, இராணுவத்தின் ஆதரவுடன் விகாரை அமைக்கப்பட்ட காணிகளை அதன் உரிமையாளர்களிடம் மீளத் தர சிங்கள பௌத்த மக்கள் முன்வர வேண்டும் என தமிழ் அரசியல் ஆர்வலர் ஒருவர் அழைப்பு விடுத்துள்ளார்.

உலகெங்கிலும் உள்ள பௌத்தர்களால் புத்தரின் பிறந்தநாளை நினைவுகூரும் வெசாக் போயா தினத்தன்று, யாழ்ப்பாணம், காங்கேசன்துறை, தையிட்டி கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரைக்கு அருகில் போராட்டத்திற்கு தலைமை வகித்த, தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் (TNPF) சட்ட ஆலோசகர் நடராஜர் காண்டீபன் இந்தக் கோரிக்கையை விடுத்தார்.

“சிங்கள பௌத்த பேரினவாதத்திற்கு எதிராக சிங்கள மக்களும் கிளர்ந்து எழுந்து புத்த பகவானுடைய போதனைகளை முன்னிறுத்தி இந்த போராட்டத்திற்கு உதவ வேண்டுமென நாங்கள் கோரிக்கை விடுக்கின்றோம். புத்த பெருமான் அன்பை போதித்தவர். அடக்குமுறைகளுக்கு எதிரானவர். அமைதியை போதித்தவர் என்ற அடிப்படையில் இந்த அப்பாவி மக்களுடைய காணிகள் கட்டமைப்பு சார் இனப்படுகொலையாக, சிங்கள பௌத்த பேரினவாதம், குறிப்பாக ஸ்ரீலங்கா இராணுவத்தினரால் கட்டப்பட்டு நடத்தப்படும் விகாரை என்றுதான் அங்கு பெயர்ப்பலகை காணப்படுகிறது, இந்த ஆக்கிரமிப்பை தொடர்ந்து மேற்கொள்வதை சிங்கள மக்கள் தடுத்து நிறுத்த வேண்டும்.”

காங்கேசன்துறை தையிட்டி கிராமத்தில் திஸ்ஸ விகாரைக்காக இராணுவத்தால் கையகப்படுத்தப்பட்ட நிலத்தை விடுவிக்கக் கோரி நீண்டகாலமாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தமிழ் மக்கள், மார்ச் 20, 2025 அன்று கொழும்பில் ஒரு ஊடக சந்திப்பை நடத்தி, நிலத்தின் மீதான தங்கள் உரிமையை உறுதிப்படுத்தும் ஆவணங்களையும், நில அபகரிப்புக்கான நம்பகமான ஆதாரங்களையும் சமர்ப்பித்தனர்.

திஸ்ஸ விகாரைக்காக இராணுவம் பலவந்தமாக காணிகளை கையகப்படுத்தியதன் பின்னணியை கொழும்பில் சிங்கள மொழியில் விளக்கிய பத்மநாதன் சாருஜன், யுத்தம் காரணமாக தையிட்டி பிரதேசத்தை விட்டு கிராம மக்கள் 1990ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் பகுதிக்கு சென்றதாக குறிப்பிட்டார்.

வடக்கில் உள்ள தமிழ் மக்களின் காணிகள் விடுவிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை நான்கு பௌத்த நிகாயக்கள் மற்றும் மகா சங்கத்தினரிடம் முன்வைக்க நடவடிக்கை எடுக்குமாறு சிங்கள பௌத்த மக்களிடம் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சட்ட ஆலோசகர் நடராஜர் காண்டீபன் மே 12 அன்று மேலும் கேட்டுக்கொண்டார்.

“இந்த புனிதமான, தானம் வழங்குகின்ற நாளிலே எங்களுடைய காணிகள் விடுவிக்கப்பட வேண்டுமென்ற கோரிக்கையை, மகா சங்கத்தினரிடமும், அஸ்கிரிய, மல்வத்து, அமரபு, ராமாஞ்ச ஆகிய நிக்காயக்களிடமும் இந்த கோரிக்கையை முன்வைக்க வேண்டுமென கோருகின்றோம். இந்த நிலங்களை ஆக்கிரமித்திருப்பது பௌத்த தர்மத்திற்கு முரணானது, தேரவாத பௌத்தத்திற்கு முரணானது என நீங்கள் உங்கள் ஜனாதிபதிக்கு சொல்லுங்கள்.”

ஏப்ரல் 26, 2025 அன்று கிளிநொச்சியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, இராணுவம் ஆக்கிரமித்துள்ள தமிழ் மக்களின் நிலங்களிலிருந்து ‘விடுவிக்கக்கூடிய’ ஒவ்வொரு அங்குல நிலத்தையும் மீள கையளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியிருந்தார்.

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழ் மக்களால் உரிமை கோரப்படும் நிலங்களை கையகப்படுத்துவது மற்றும் விகாரைகளை அமைப்பது குறித்து ஜனாதிபதி தனது நிலைப்பாட்டை இன்றுவரை வெளிப்படுத்தியதாகத் தெரியவில்லை.

காங்கேசன்துறையில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க திஸ்ஸ விகாரையில் புனரமைக்கப்பட்ட ஸ்தூபி வைக்கும் பணி 27 ஏப்ரல் 2023 அன்று இடம்பெற்றது.” என இலங்கை இராணுவம் ஏப்ரல் 29ஆம் திகதி தனது உத்தியோகபூர்வ இணையதளத்தில் செய்தி வெளியிட்டிருந்தது.

“கி.பி. 3ஆம் நூற்றாண்டில் தேவநம்பிய திஸ்ஸ மன்னன் காலத்தில் இந்த விகாரை அமைக்கப்பட்டது.” என இலங்கை இராணுவம் தெரிவிக்கின்றது.

2023 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி நாளில் விகாரை அருகே தங்கள் நிலங்களை விடுவிக்கக் கோரி போராட்டம் நடத்தி வரும் தமிழர்கள், திஸ்ஸ விகாரையை அமைப்பதற்காக 14 தமிழ் குடும்பங்களுக்குச் சொந்தமான சுமார் 100 பரப்பு (6.2 ஏக்கர்) நிலத்தை இராணுவம் வலுக்கட்டாயமாக கையகப்படுத்தியதாகக் குற்றம் சாட்டுகின்றனர்.

விகாரையை நிர்மாணிப்பதற்கு தெல்லிப்பளை பிரதேச செயலாளரின் அனுமதி பெறப்படவில்லை எனவும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Related Posts