Ad Widget

வீதிகளில் குவியும் மாமிசக் கழிவுகளால் மக்கள் பாதிப்பு!

யாழ்ப்பாணம் கல்வியங்காட்டுச் சந்தியில் ஆடியபாதம் வீதியில் மாமிசக் கழிவுகள் குவிக்கப்படுகின்ற காரணத்தினால் போக்குவரத்திலும், சுகாதாரத்திலும் பாதிப்பு ஏற்படுவதாக அப்பிரதேச குடியிருப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.

குறித்த சந்தியில் போடப்பட்டுள்ள கழிவுகளை நல்லூர் பிரதேச சபை அகற்றாத காரணத்தினால் குப்பைகள் குவிந்து காணப்படுகின்றன.

kuppai-helth

சந்தியில் குப்பைகள் காணப்படுவதால் சுகாதார பாதிப்பு மற்றும் போக்குவரத்திற்கு தடை ஏற்படுவதுடன் குப்பை குவிக்கப்பட்டுள்ள இடத்துக்கு முன்னால் வடக்குப் பக்கமாக கல்வியங்காடு எரிபொருள் நிரப்பு நிலையமும் காணப்படுகின்றது.

குப்பைகள் தற்செயாலாக தீப்பற்றும் நிலை ஏற்படுமாயின் அருகிலுள்ள எரிபொருள் நிலையத்திற்கு பாதிப்பு ஏற்படுவதுடன், மற்றைய குடியிருப்புகளும் வர்த்தக நிலையங்களும் சேதத்துக்குள்ளாகும் நிலையை கவனத்தில் எடுத்து வர்த்தக நிலையங்கள் கழிவுகளைக் கொட்டுவதை தவிர்த்துக் கொள்ளுமாறு அப்பிரதேச மக்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

மேலும் அருகிலுள்ள மாநகர சபைக்குட்பட்ட கழிவுகளே வர்த்தகர்களால் குறிப்பிட்ட இடத்தில் பொறுப்பற்ற முறையில் கொட்டப்படுவதை தவிர்த்து சமூக நலனில் அக்கறை கொள்ளுமாறு பொதுமக்களால் கோரிக்கை விடப்பட்டுள்ளது.

நல்லூர் பிரதேச சபையும் குறித்த இடத்தில் குப்பை கொட்டுபவர்களை இனம்கண்டு சட்ட நடவடிக்கை எடுப்பதுடன் குறித்த இடத்திலுள்ள கழிவுகளை உடனடியாக அகற்றுமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Posts