அரச வாகனங்களை முறைகேடாக பயன்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த விமல் வீரவன்சவிற்கு பிணையில் செல்ல கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (வெள்ளிக்கிழமை) உத்தரவிட்டுள்ளது.
50 ஆயிரம் ரூபாய் ரொக்க பிணையிலும் ஒரு லட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணையிலும் அவர் விடுவிக்கப்பட்டுள்ளதுடன், சரீரப் பிணைக்காக குடும்ப உறவினர் ஒருவர் முன்னிலையாக வேண்டுமெனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், விமல் வீரவன்சவின் வெளிநாட்டு பயணங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், கடவுச்சீட்டினை நீதிமன்றில் ஒப்படைக்குமாறும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேற்படி குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த விமல் வீரவன்ச, அண்மையில் தனக்கு பிணை வழங்கக்கோரி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.