Ad Widget

வித்தியா வழக்கில் எழுவருக்கு மரண தண்டனை

புங்குடுதீவு மாணவி வித்தியா சிவலோகநாதன், வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுக் கொலை செய்யப்பட்டமை தொடர்பான வழக்கில், ஏழு பேருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளன என, ட்ரயல் அட் பார் மன்று, சற்று முன்னர் தீர்ப்பளித்து, அவர்களுக்கு மரண தண்டனைத் தீர்ப்பளித்தது.

மரண தண்டனையோடு, 30 ஆண்டுகளுக்குச் சிறைத் தண்டனையும், 40,000 ரூபாய் தண்டப் பணமும், வித்தியாவின் குடும்பத்துக்கு 1 மில்லியன் ரூபாய் நட்டஈடும் வழங்கப்பட வேண்டுமென, அமர்வு உத்தரவிட்டது.

இதில், 2ஆம், 3ஆம், 5ஆம், 6ஆம் எதிரிகளான பூபாலசிங்கம் ஜெயக்குமார், பூபாலசிங்கம் தவக்குமார், தில்லைநாதன் சந்திரகாசன், சிவதேவன் துஷாந்தன் ஆகியோர், கூட்டு வன்புணர்வு, கொலை ஆகிய குற்றச்சாட்டுகளில், குற்றவாளிகளாக இனங்காணப்பட்டுள்ளனர்.

2ஆம், 3ஆம், 4ஆம், 5ஆம், 6ஆம், 8ஆம், 9ஆம் எதிரிகளான பூபாலசிங்கம் ஜெயக்குமார், பூபாலசிங்கம் தவக்குமார், மகாலிங்கம் சசீந்திரன், தில்லைநாதன் சந்திரகாசன், சிவதேவன் துஷாந்தன், ஜெயதரன் கோகிலன், மகாலிங்கம் சசிக்குமார் ஆகியோர் மீதான, குற்றமொன்றை மேற்கொள்வதற்கான சதி மேற்கொண்ட குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே, அரசாங்கத் தரப்புத் தொகுப்புரையில், முதலாம், ஏழாம் எதிரிகள் மீதான குற்றச்சாட்டுகளை, சந்தேகத்துக்கிடமின்றி நிரூபிக்க முடியவில்லை எனக் குறிப்பிடப்பட்டிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

Related Posts