Ad Widget

வித்தியா கொலை வழக்கின் அடுத்த கட்டம்!

யாழ்.புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கின் எதிரிகள் தரப்பு சாட்சிப் பதிவுகள் இன்று (திங்கட்கிழமை) ஆரம்பமாகவுள்ளன.

ட்ரயல் அட் பார் தீர்ப்பாய முறையில் கடந்த இரண்டு மாதங்களாக முன்னெடுக்கப்பட்டு வந்த வித்தியா கொலை வழக்கின், வழக்கு தொடுநர் தரப்பு சாட்சிப் பதிவுகள் கடந்த 4ஆம் திகதியுடன் நிறைவடைந்ததாக பிரதி சொலிஸிட்டர் ஜெனரல் குமார் இரட்ணம் மன்றில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இன்று முதல் எதிரிகள் தரப்பு சாட்சியப்பதிவை நெறிப்படுத்தப் போவதாக எதிர்த்தரப்பு சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.

அதன் பிரகாரம், இன்று ஆரம்பமாகும் எதிரிகள் தரப்பு சாட்சியப்பதிவு 29ஆம், 30ஆம் மற்றும் 31ஆம் திகதிகளிலும், செப்டெம்பர் மாதம் 4ஆம், 11ஆம், 12ஆம், 13ஆம், 14ஆம் மற்றும் 15ஆம் திகதிகளிலும் இடம்பெறவுள்ளது.

யாழ். மேல் நீதிமன்ற கட்டட தொகுதியின் இரண்டாம் மாடியில், மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் தலைமையில் மேல் நீதிமன்ற நீதிபதிகளான அன்னலிங்கம் பிரேமசங்கர் மற்றும் மாணிக்கவாசகர் இளஞ்செழியன் ஆகியோர் முன்னிலையில் சாட்சியப்பதிவுகள் இடம்பெறவுள்ளன.

குறித்த சாட்சியப்பதிவின் போது எதிரிகள் சுதந்திரமாக தமது கருத்தைத் தெரிவிக்கலாம் என்றும், எவ்வித கருத்துக்களையும் தெரிவிக்காமல் இருப்பதற்கும் சுதந்திரம் உண்டு எனவும் கடந்த வழக்கு விசாரணைகளில் நீதிபதிகள் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts