Ad Widget

வித்தியா கொலைச் சந்தேகநபர்கள் நீதிமன்றில் முற்படுத்தப்படவில்லை; கொழும்பு நீதிமன்றில் முற்படுத்துமாறு உத்தரவு

வித்தியாவின் வழக்குடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் எவரும் இன்று நீதிமன்றில் முற்படுத்தப்படவில்லை.

புங்குடுதீவு மாணவி வித்தியாவின் வழக்கு இன்று ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இருப்பினும் இன்று நாடாளுமன்றத் தேர்தல்களின் வேட்பு மனுத் தாக்கல் செய்வதன் இறுதிநாள் என்றமையால் வேட்பு மனு தாக்கல் செய்யப்படும் பகுதிகளுக்கு அதிகளவான பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

எனவே சந்தேக நபர்களை நீதி மன்றுக்கு கொண்டுவருவதற்கான பாதுகாப்பு போதியளவில் காணப்படாமையால் சந்தேக நபர்கள் 9 பேரும் நீதிமன்றில் முற்படுத்தவில்லை என தெரிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து சந்தேக நபர்கள் 9 பேரையும் கொழும்பு பிரதான நீதிவான் நீதி மன்றில் இன்று முற்படுத்துமாறு ஊர்காவற்றுறை நீதிமன்ற நீதிவான் உத்தரவு பிறப்பித்துள்ளார். இவ் உத்தரவானது தொலைநகல் மூலம் கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை புங்குடுதீவு மாணவி வித்தியாவின் கொலை வழக்குடன் சம்பந்தப்பட்ட சந்தேக நபர்கள் மற்றும் அவர்களது உறவினர்கள் பயன்படுத்திய ஐ பாட், மடிக்கணினி மற்றும் கையடக்க தொலை பேசிகள் என்பவற்றை மொறட்டுவ தொழில்நுட்பக் கல்லூரிக்கு அனுப்பி பகுப்பாய்விற்கு உட்படுத்துவதற்கு நீதிவான் நீதி மன்ற நீதிவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மேலும் மாணவி வித்தியாவின் இரத்த மாதிரி, சந்தேக நபர்களது இரத்த மாதிரி ஆகியன பகுப்பாய்விற்கு உட்படுத்தப்பட்டு பெறப்பட்ட அறிக்கை இன்று மன்றில் சமர்ப்பிக்கப்பட்டது.

கடந்த மே 13 ஆம் திகதி கூட்டு வன்புணர்விற்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட மாணவி வித்தியாவின் கொலைச் சந்தேக நபர்களது மாதிரிகளை இரசாயணப்பகுப்பாய்விற்கு உட்படுத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு கடந்த வழக்கு விசாரணையின் போது உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

அதன்படி இன்று இரத்த மாதிரிகளின் பகுப்பாய்வு அறிக்கை மன்றில் சமர்ப்பிக்கப்பட்டது. இருப்பினும் சந்தேக நபர்கள் எவரும் வழக்கிற்கு முற்படுத்தப் படாமையினால் குறித்த அறிக்கை தொடர்பிலான விசாரணைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

Related Posts