விடுதலைப் புலிகளுக்கு எதிராக எனது அணியினர் 600 பேர் போரிட்டனர்! – கருணா

வன்னியில் இடம்பெற்ற இறுதிப்போரில் தனக்கு சார்பான 600 பேரை புலிகளுக்கு எதிராகப் போரிட அனுப்பினார் என்றும், அதில் தற்போது 300 பேரே எஞ்சியுள்ளனர் என்றும் தெரிவித்திருக்கிறார் கருணா என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன்.

தேசியப் பட்டியலில் தனக்கு எம்.பி. பதவி தரப்படும் என ஶ்ரீலங்கா தேசியக் கட்சியின் பொதுச் செயலர் அனுர பிரியதர்ஷன யாப்பாவும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் சுசில் பிரேம ஜயந்தவும் தனக்கு வாக்குறுதி அளித்து ஏமாற்றி விட்டனர் எனத் தெரிவித்துவரும் முரளிதரன் இப்போது இறுதி யுத்தத்தில் நடந்த பல விடயங்கள் குறித்து வாய் திறந்துள்ளார்.

ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள தகவலிலேயே இந்தத் தகவல்களை அவர் வெளியிட்டுள்ளார். அதில் அவர் மேலும் தெரிவித்த விடயங்கள் வருமாறு:

போர் முக்கியமான கட்டத்தை எட்டியிருந்த சமயத்தில் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோட்டாபய ராஜபக்‌ஷ என்னுடைய உதவி தேவை எனக் கோரினார். அச்சமயத்தில் நாட்டுக்காக நான் முக்கியமான – ஆபத்தான முடிவை நான் எடுத்தேன்.

இதனால் தமிழ் மக்களிடம் இருந்து எதிர்ப்பை சம்பாதிக்க நேர்ந்துள்ளது. அச்சமயத்தில் விடுதலைப் புலிகளிடம் இருந்து என்னுடன் பிரிந்து வந்த 600 பேரை நான் போரிட அனுப்பினேன். ஆனால் அதில் 300 பேரே எஞ்சினர்.

தற்போது நானே அதற்கான பொறுப்பை ஏற்க நேரிட்டுள்ளது. இது மகிழ்ச்சியான ஒரு சூழல் இல்லை. இது பற்றி நான் முடிவு ஒன்றை எடுக்க வேண்டியுள்ளது – என்றார்.

Related Posts