Ad Widget

விடுதலைப்புலிகள் மீதான தடை நீக்கம்!

ஐரோப்பிய ஒன்றிய  நீதிமன்றம் புலிகள் மீதான தடையை நீக்கியுள்ளது.    லதன் சுந்தரலிங்கம் என்பவர் ஐரோப்பிய ஒன்றியம் விதித்த தடையை எதிர்த்து 2011-ல் லக்சம்பேர்க்கில் உள்ள ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் விடுதலைப் புலிகள் சார்பாக நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த வழக்கறிஞர் விக்டர் கோப் முன்னிலையாகி வாதாடி வந்தார்.

இந்த வழக்கில் கடந்த 2014 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் முதல் விசாரணை நடைபெற்று வந்தது. இந்த விசாரணையின் போது 2009 ஆம் ஆண்டுக்குப் பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகள் ஆயுதம் ஏந்தவில்லை; தங்களது மக்களுக்காக வன்முறையற்ற வழிகளில்தான் தமிழீழ விடுதலைப் புலிகள் போராட விரும்புகின்றனர் என்று வாதிடப்பட்டது.

மேலும் விக்கிபீடியா தகவல்களை அடிப்படையாகக் கொண்டு விடுதலைப் புலிகள் மீது ஐரோப்பிய ஒன்றியம் தடை விதித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இலங்கையில் இனப்படுகொலை என்று கூறுமளவிற்கான ஒரு ஒடுக்குமுறை ஆட்சிக்கு எதிராகத்தான் நியாயமான போராட்டத்தை விடுதலைப் புலிகள் நடத்தினர் என்றும் புலிகளின் வழக்கறிஞர் கோப் வாதிட்டார்.     இன்று இந்த வழக்கில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீது விதிக்கப்பட்ட தடையை நீக்கி தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

இது தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஐரோப்பிய ஒன்றியத்தில் சட்ட ரீதியாக கிடைத்த அங்கீகாரமாக கருதப்படுகிறது.   இதேவேளை ஐரோப்பிய ஒன்றியத்திலுள்ள 28 நாடுகளில் தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள் சுதந்திரமாக செயற்பட முடியும் என்பதால் விடுதலைப் புலிகளின் புலம்பெயர் ஆதரவாளர்கள் இனிப்புகள் வழங்கியும் வெடி கொழுத்தியும் தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றனர்.   இதேவேளை விடுதலைப் புலிகள் மீது தடை விதித்த முடிவை நீதிமன்றம் ரத்து செய்திருந்தாலும், பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் இருந்து விடுதலைப்புலிகள் அமைப்பு நீக்கப்படவில்லை.

விடுதலை புலிகள் அமைப்பை பயங்கரவாதப் பட்டியலில் சேர்க்கப்படுவதில் கையாளப்பட்டிருந்த நடைமுறையில் தவறுகள் இருக்கின்ற காரணத்தால், இந்த முடிவை எடுத்துள்ளதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.     விடுதலைப் புலிகள் அமைப்பு பயங்கரவார அமைப்பு என்று இந்தியாவில் அறிவிக்கப்பட்டிருந்த முடிவின் அடிப்படையில் ஐரோப்பிய கவுன்சில் முடிவெடுத்திருந்ததாகவும், அது முறையல்ல என்றும் நீதிமன்றும் குறிப்பிட்டுள்ளது.

எனவே ஒரு மூன்று மாத காலத்தில் விடுதலைப் புலிகள் அமைப்பை பயங்கரவாதப் பட்டியலில் வைத்திருப்பது பற்றி ஐரோப்பிய கவுன்சில் மறுபடியும் பரிசீலித்து புதிதாக முடிவெடுக்க வேண்டும் என நீதிமன்றம் கூறியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன

Related Posts