விடுதலைப் புலிகளின் மீள்வருகையை வலியுறுத்தும் வகையிலான விஜயகலாவின் உரை நிகழ்த்தப்பட்ட நிகழ்வில் பங்கேற்றவர்களிடம் யாழ். பொலிஸார் இன்று (செவ்வாய்க்கிழமை) விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
அந்தவகையில், குறித்த நிகழ்வில் பங்கேற்றிருந்த வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனிடம் தற்போது விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அங்கிருக்கும் எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.
முதலமைச்சரின் வாசஸ்தலத்தில் இந்த விசாரணைகள் தற்போது இடம்பெற்று வருகின்றன.
இன்று காலை, குறித்த நிகழ்வில் பங்கேற்றிருந்த ஊடகவியலாளர்கள் யாழ். பொலிஸ் நிலையத்திற்கு வரவழைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு இருந்த நிலையிலேயே தற்போது முதலமைச்சரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளன.
குறித்த நிகழ்வில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர்களும் விஜயகலா விவகாரம் தொடர்பாக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.
வடக்கின் அட்டூழியங்களை கட்டுப்படுத்த விடுதலை புலிகள் மீண்டும் உருவாக வேண்டும் என அண்மையில் யாழில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்திருந்தார்.
அவரது இக்கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில், விஜயகலாவின் கருத்து அரசியலமைப்பு மீறும் வகையில் அமைந்திருப்பின் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு பல்வேறு தரப்பிலிருந்து அழுத்தங்கள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் யாழ். நிகழ்வில் ஆற்றிய உரை தொடர்பாக அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படின் அது பேச்சு சுதந்திரத்தை பாதிப்பதாக அமையும் என வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
விஜயகலாவிக் உரை தொடர்பில் முதலமைச்சரிடம் யாழ். பொலிஸார் இன்று (செவ்வாய்க்கிழமை) விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர். இதனை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”விஜயகலாவின் உரை இடம்பெற்ற நிகழ்வில் நானும் பங்கேற்றிருந்த நிலையில், திட்டமிட்ட குற்றத் தடுப்புப்பிரிவினர் எனது வாசஸ்தலத்திற்கு வருகைத்தந்து விஜயகலாவின் உரை குறித்து எனது கருத்தை வினவியிருந்தனர்.
புலிகள் திரும்பவும் வர வேண்டும் என்று நாங்கள் பாடுபடுகின்றோம் என்று அவர் கூறியது பாதுகாப்புச் சூழலையே அன்றி வன்முறைகளை மீண்டும் தொடங்கும் நோக்குடன் அல்ல.
அவருக்கு எதிராக நடவடிக்கை எடுத்தால் அது எமது பேச்சுச் சுதந்திரத்தைப் பாதிப்பதாக அமையும்” என்றும் குறிப்பிட்டார்.