Ad Widget

விக்னேஸ்வரனை சந்திக்க மோடி விருப்பம் தெரிவித்தார்’

இலங்கையின் வடக்கு மாகாணசபை முதலமைச்சரான சி.வி. விக்னேஸ்வரனை விரைவில் சந்திக்க இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி விருப்பம் தெரிவித்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் குழுவினர் புதுடில்லியில் நேற்று சனிக்கிழமை தெரிவித்துள்ளனர்.

tna_sambanthan-team

பிரதமர் நரேந்திர மோடி, புதுடில்லி வந்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர்களை நேற்று சனிக்கிழமை காலை சந்தித்தார்.

இலங்கையில் நிலவும் தற்போதைய சூழல் பற்றியும் அதிகாரப்பகிர்வு மற்றும் நல்லிணக்க நடவடிக்கைகள் தொடர்பில் தங்களின் மதிப்பீடுகளும் எதிர்பார்ப்புகளும் எவ்வாறு உள்ளன என்பது பற்றியும் இரா. சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக் குழுவினர் பிரதமருக்கு விளக்கம் அளித்துள்ளதாக இந்திய பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சம்பந்தன், அரசியல் தீர்வு காண வேண்டிய விவகாரங்கள் குறித்து இந்தியப் பிரதமரிடம் எடுத்துரைத்ததோடு, இலங்கையின் வடக்கு கிழக்கு பகுதிகளில் நலத்திட்டப் பணிகள் என்ற பெயரில் அந்நிய சக்திகளின் ஊடுருவல் காரணமாக அச்சம் ஏற்பட்டுள்ளதாக கூறியதாகவும் தெரிவித்தார்.

மேலும், இந்திய அரசாங்கம் தொடர்ந்து இலங்கையின் வடக்கு கிழக்குப் பகுதிகளில் அனைத்து நலப்பணிகளையும் மேற்கொள்ளும் என்றும், தேவையான அனைத்து விவகாரங்களிலும் தவறாமல் அக்கறை காட்டும் என்றும் நரேந்திர மோடி உறுதியளித்ததாகவும் சம்பந்தன் கூறினார்.

‘ஜெயலலிதாவை சந்திக்க காத்திருக்கிறோம்’

இலங்கைத் தமிழ் மக்களின் நலனுக்காக இந்தியப் பிரதமரை சந்திக்கும் நீங்கள், தமிழகத்தின் அரசியல் தலைவர்களின் தலையீட்டை வேண்டாம் என்று மறுப்பது ஏன் என்று சம்பந்தனிடம் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த சம்பந்தன், நாங்கள் யாரையும் வெறுக்கவில்லை, தமிழகத்தின் அரசியல் தலைவர்கள் மற்றும் மக்களின் பங்களிப்பைமுழுமையாக வரவேற்போம் என்றார்.

ஆனால், இதற்குத் தேவையான செயற்பாடுகள் அனைத்தும் ஒற்றுமையாகவும் ஒருமனதோடும் நடைபெற வேண்டும் என்று விரும்புவதாக அவர் பதிலளித்தார்.
இந்திய மக்களவைத் தேர்தலுக்குப் பின்னர் தமிழகத்தில் கிடைக்கப்பெற்ற வெற்றிக்கு வாழ்த்துக் கூறி தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு கடிதம் எழுதிய போதே, நேரில் சந்திக்க விருப்பம் தெரிவித்ததாகவும், அதன் பின்னர் தற்போது வரை சந்திப்பு தொடர்பான பதிலுக்கு காத்திருப்பதாகவும் தெரிவித்தார்.

தமிழக அரசுடன் தாங்கள் தொடர்பில் இல்லை என்று கூறுவது தவறு என்றும் அவர் அப்போது விளக்கம் அளித்தார்.

Related Posts