Ad Widget

விக்கி அணிக்கு மகிந்த தரப்பு அழைப்பு!

வட மாகாண முன்னாள் முதலமைச்சர் க.வி.விக்கினேஸ்வரன் தலைலையிலான கூட்டணியை, தம்முடன் வந்து இணைந்து செயலாற்றுமாறு மகிந்த ராஜபக்ச தரப்பினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

தமிழ் மக்கள் தேசிய கூட்டணி என்ற பெயரில் வட மாகாண முன்னாள் முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் தலைமையில் கடந்த ஞாயிறன்று புதிய அரசியல் கூட்டணியொன்று ஆரம்பிக்கப்பட்டது.

இந்நிலையில், கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது, ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் உறுப்பினரும், இராஜாங்க அமைச்சருமான ரோஹித அபேகுணவர்தன விக்கினேஸ்வரன் கூட்டணியை வரவேற்றிருந்தார்.

இதுகுறித்து அவர் அங்கு மேலும் தெரிவித்தவை வருமாறு-

“விக்கினேஸ்வரன் புதிய கூட்டணி ஒன்றை அமைத்து அறிவிப்பு ஒன்றையும் விடுத்திருந்ததை அவதானித்திருந்தோம். அதில் சிங்கள மக்கள் குறித்து சில கருத்துகளையும் வெளியிட்டிருந்தார்.

ஜனநாயக ரீதியில் கட்சி ஒன்றை உருவாக்குவதற்கான உரிமை அனைவருக்கும் இருக்கின்றது. எவ்வாறாயினும் வடக்கில் சிறந்த தலைவர் ஒருவர் உருவாகி தற்போதைய அரசாங்கத்துடன் இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகண்டு முன்நோக்கி நகர்வதே சிறந்ததாகும்.

வடக்கு மக்கள் எப்போதுமே அதிகாரங்களைத் தாருங்கள் என்றே கேட்கிறார்கள்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சி தோல்வியடையும் என்பது நன்கு உணரப்பட்டது போல, முன்னர் வடமாகாணத்தில் நாங்கள் தோல்வியடைவோம் என்பதை முன்கூட்டியே அறிந்திருந்தோம்.

எனினும், ஜனநாயக ரீதியில் வடமாகாண சபையை அமைத்து தேர்தலும் நடத்தினோம். முதலமைச்சர் ஒருவர் தெரிவானார். வடமாகாண சபை மற்றும் அதிகாரங்களைக் கொடுக்கப்பட்டன. ஆனால், அவர்கள் மக்களுக்கு என்ன செய்தார்கள்?

எனவே, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தலைவர்கள் எழவேண்டும். அவர்கள் அரசாங்கத்துக்கு எதிராக அல்லாமல் அரசாங்கத்துடன் ஒத்துழைத்து மக்களுக்காகப் பணிபுரிய வேண்டும். அதற்காக நாங்கள் அழைப்பு விடுக்கின்றோம்” என்றார்.

Related Posts