Ad Widget

வாழ்வின் எழுச்சி (திவிநெகும) சூடான விவாதங்கள்

திவிநெகும சட்டமூலம் நிறைவேற்றம்

திவிநெகும சட்டமூலம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையினால் செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட இந்த சட்டமூலத்திற்கு ஆதரவாக 160 வாக்குகளும் எதிராக 53 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன.

சிறுப்பான்மை கட்சிகளான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஈ.பி.டி.பி, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ், தேசிய காங்கிரஸ், மலையக மக்கள் முன்னணி மற்றும் ஜனநாயக மக்கள் காங்கிரஸ் ஆகியன இந்த சட்டமூலத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ளன.இதேவேளை, ஐக்கிய தேசிய கட்சி, தமிழத் தேசிய கூட்டமைப்பு, பிரஜைகள் முன்னணி மற்றும் மக்கள் விடுதலை முன்னணி ஆகியன குறித்த சட்டமூலத்திற்கு எதிராக வாக்களித்தமை குறிப்பிடத்தக்கது.

திவிநெகும சட்டமூலம் தொடர்பாக சில அரசியல் கட்சி பிரமுகர்களின் சூடான விவாதங்கள்

 

தேசிய இனப்பிரச்சினைக்கு இன்னமும் தீர்வு காணப்படவில்லை: சுரேஸ் பிரேமசந்திரன்

SURESH

திவிநெகும சட்டமூலம் தொடர்பில் நாடாளுமன்றில் நடைபெற்ற விவாதத்தில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,மாகாணசபைகளின் அதிகாரங்களை பறிக்கும் வகையில் திவிநெகும சட்டமூலம் உருவாக்கப்பட்டுள்ளது. இதனை ஏற்றுக்கொள்ள முடியாது.மாகாணசபைச் சட்டத்துடன் தொடர்புடைய 15 விடயங்கள் தொடர்பில் திவிநெகும சட்டமூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

1988ம் ஆண்டு 13ம் திருத்தச் சட்டத்தின் மூலம் மாகாணசபைகளுக்கு குறைந்தளவு அதிகாரங்கள் வழங்கப்பட்டன. இந்த அதிகாரங்களையும் மீளப்பெற்றுக் கொள்ள முயற்சிக்கப்படுகின்றது.திவிநெகும சட்டமூலம் தமிழ் மக்களுக்கு அவசியமானதா என்ற கேள்வி எழுந்துள்ளது.இந்தச் சட்டமூலம் ஓர் ஏகாதிபத்திய அதிகாரங்களை உள்ளடக்கியது. இதனால் இந்தக் சட்டமூலத்திற்கு எதிர்ப்பை வெளியிடுகின்றோம் என சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களுக்கு அதிகாரம் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்: சுமந்திரன்

Sumanthiran MP

திவிநெகும சட்டம் தொடர்பான நாடாளுமன்ற விவாதத்தில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,திவிநெகும சட்டம் மாகாணசபை அதிகாரங்களை பறிக்கும் வகையில் அமைந்துள்ளது. இதனையே உச்ச நீதிமன்ற தீர்ப்பும் வலியுறுத்துகின்றது.தமிழ் மக்களுக்கு அதிகாரங்களை பகிர்ந்தளிக்கும் நோக்கில் கொண்டு வரப்பட்ட 13ம் திருத்தச் சட்டம் பகுதியளவிலேயே அமுல்படுத்தப்படுகின்றது.

சமுர்த்தி உத்தியோகத்தர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்குவதனை நாம் எதிர்க்கவில்லை.அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை திட்டுவதனை தொழிலாகக் கொண்டுள்ளார் என சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

திவிநெகும சட்டமூலம் குறித்து கூட்டமைப்பு போலிப் பிரசாரம்: டக்ளஸ் தேவானந்தா

daklasதிவிநெகும சட்டமூலம் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போலிப் பிரசாரம் செய்து வருவதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களில் சமுர்த்தி திட்டத்தின் நன்மைகளை தமிழ் மக்களினால் அனுபவிக்க முடியாத நிலைமை காணப்பட்டது. அந்த நிலைமையை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மாற்றியமைத்தார்.சுரேஸ் பிரேமசந்திரன் தமிழ் இராச்சியம் பற்றி கனவு காண்கின்றார். 13ம் திருத்தச் சட்டம் பற்றி கூட்டமைப்பினர் கதைப்பது ஒரு வகையில் வெற்றியாகவே கருதப்பட வேண்டும்.

திவிநெகும சட்டமூலம் தமிழ் மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போலிப் பிரச்சாரம் செய்கின்றது.தமிழ் பேசும் மக்களை  அரசாங்கம் கைவிடவில்லை எனவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.திவிநெகும சட்டமூலம் தொடர்பிலான நாடாளுமன்ற விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

 

திவிநெகும சட்டமூலம் மாகாண சபைகளின் அதிகாரங்களை பறிக்கும் வகையில் அமையவில்லை: பசில் ராஜபக்ச

pasil-rajapaksa

மாகாணசபைகளை விடவும் அதிகளவான அதிகாரங்களை மக்களுக்கு வழங்க முடியும்.மக்கள் வழங்கிய மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தைப் பயன்படுத்தி ஒரு தடவை அல்ல ஆயிரம் தடவை பயன்படுத்தி மக்கள் நலத் திட்டங்கள் முன்னெடுக்கப்படும்.மாகாண சபைகளின் அதிகாரங்கள் இந்த சட்டத்தில் உள்ளடக்கப்படவில்லை. அவ்வாறான விடயங்கள் உள்ளடக்கப்பட்டிருந்தால் சுட்டிக்காட்டவும்.வறிய மக்களுக்கு நிவாரணங்கள் வழங்கப்படுவதனை சிலர் விரும்பவில்லை. சட்ட மூலத்தை நிறைவேற்ற ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் நன்றி என அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.திவிநெகும சட்டமூலம் தொடர்பில் நாடாளுமன்றில் உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

 

சிறுபான்மை மக்களின் உரிமைகளுக்காகவே திவிநெகுமவை எதிர்த்தோம்: ரங்கா

Ranga

பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவினால் இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட திவிநெகும (வாழ்வின் எழுச்சி) சட்டமூலத்திற்கு எதிராக வாக்களித்தமை தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையிலேயே மேற்படி அவர் கூறினார்.

“மாகாண சபைகளின் அதிகாரங்களை பறித்து மத்தியில் அதிகாரத்தை குவிப்பதற்கும், சிறுபான்மை மக்களின் சிறப்புரிமைகளை இல்லாமல் செய்வதற்குமான சட்டமாக திவிநெகுமவை கருதியதாலேயே இன்றைய வாக்கெடுப்பில் நாங்கள் எதிர்த்து வாக்களித்தோம். அதுமட்டுமல்லாமல், ஜேவிபி நாடாளுமன்ற உறுப்பினர் விஜித்த ஹேரத்தினால் நிதி கையாள்வதில் வெளிப்படைத் தன்மை இல்லை என்ற சபை ஒத்திவைப்பு பிரேரணைக்கும் நாங்கள் ஆதரவு தெரிவித்தோம். திவிநெகும சட்டமூலத்தினால் சிறுபான்மை மக்களுக்கு எவ்விதமான நன்மையும் கிடைக்காத பட்சத்தில் அதனை நாங்கள் எப்பொழுதும் எதிர்ப்போம்” என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீரங்கா மேலும் கூறினார்.

மோசடிக்கு வழிவகுக்கும் அமைப்பே திவிநெகும; சஜித் எம்.பி

Sajith_Premadasaதனி ஒரு நபரிடம் எல்லையற்ற அதிகாரங்கள் அனைத்தையும் ஒன்றிணைத்து ஊழல் மோசடிகளுக்கு வழிவகுக்கும் ஒரு அமைப்பை உருவாக்குவதே “திவிநெகும’ சட்டம்.இதனால் பொதுமக்களின் நிதியை, தனி நபர் ஒருவருக்கு தன்னிச்சையாகக் கையாளும் அதிகாரத்தையும் வாரி வழங்கி உள்ளது. இதனால் நாட்டு மக்களுக்கு ஒரு நன்மையும் இல்லை  என்று எதிர்க்கட்சி உறுப்பினரான சஜித் பிரேமதாஸ நேற்று நாடாளுமன்றில் “திவிநெகும’ சட்டவரைவு தொடர்பான விவாதத்தின்போது தெரிவித்தார்.

தனிமனிதர், குடும்பம், சமூகம், சமூக நியாயம், வாழ்வாதாரம், அபிவிருத்தி, சமூக மேம்பாடு எனப் பலவும் உள்ளடக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டபோதும், இவை எல்லாம் பெயரளவில் மட்டுமே.இதுவரையும் தனித்தனியே இயங்கிவந்த சமுர்த்தி அதிகாரசபை, தெற்கு அபிவிருத்தி அதிகாரசபை, மலையக அபிவிருத்தி அதிகாரசபை என்பனவற்றின் பல ஆயிரம் கோடி ரூபா பணம் “திவிநெகும’ அமைப்பிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.
இந்த மூன்று அபிவிருத்தி அதிகாரசபைகளின் கீழ் பணியாற்றிய பல ஆயிரம் ஊழியர்களின் எதிர்காலம் சூனியமாக்கப்பட்டுள்ளது. கடந்த 18 வருடங்களாக சமுர்த்தி அதிகாரசபையின் கீழ் பணியாற்றிவரும் 27 ஆயிரம் ஊழியர்கள் அரச ஊழியர்களாக  உள்வாங்கப்படவுள்ளதாகக் கூறுகின்றனர்.
அவர்களின் கணக்கில் இருக்கும் பல ஆயிரம் கோடி ரூபா ஊழியர் சேமலாப நிதி, ஊழியர் நம்பிக்கை நிதியம், சேவைக்காலப் பணம் என்பன தொடர்பாக எதுவும் கூறப்படவில்லை.”திவிநெகும’ அமைப்பின் பணிப்பாளரொருவர் நியமிக்கப்படும்போது அவருக்கான தகைமைகள் என்ன என்று கூறப்படவில்லை. ஆக்கும் அழிக்கும் அதிகாரம்
ஓர் அமைச்சரின் கைக்கு அமைச்சர் தனக்கு வேண்டிய தலையாட்டி பொம்மையொன்றை பணிப்பாளராக நியமிக்க முடியும்.
நிர்வாக சபையில் உள்ள 11 உறுப்பினர்களுள் 6 பேரை அமைச்சரே நியமிப்பார். பணிப்பாளரும், நிர்வாக சபையும் எடுக்கும் தீர்மானங்கள் அமைச்சரால் ஏற்றுக்கொள்ளப்பட்டால் மட்டுமே செயற்படுத்தமுடியும். ஆக்கவும், அழிக்கவும் கூடிய வல்லமை அமைச்சரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
ஒரு நபரை நியமனம் செய்யவும்,  அவரைப் பதவி நீக்கம் செய்யவும் இந்த அமைச்சருக்கே முடியும். எந்த ஒரு அதிகாரசபையினதும் நிதி நிர்வாகம் தொடர்பாக மத்திய வங்கி கண்காணிப்புச் செய்யமுடியும். ஆனால், “திவிநெகும’ நிதியம் தொடர்பாக மத்திய வங்கி கண்காணிப்புச் செய்யமுடியாது என்றும் கூறப்பட்டுள்ளது.
பொதுமக்களின் பணம் வெளிப்படையாக இருக்கவேண்டும். ஆனால், இங்கே இரகசியம் பாதுகாக்கப்படவேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பல்லாயிரம் கோடி ரூபாவை தனி ஓர் அமைச்சர் தன்னிச்சையாகக் கையாளமுடியும். தேவையேற்படின், அவர் அதனை அரசியல் செயற்பாடுகளுக்கும் செலவிட இடமுண்டு.
ஜனாதிபதி ஆச்சரியமான இலங்கை என்கிறார். ஆனால், “திவிநெகும’ சட்டம் அதிசயமான ஒரு சட்டமாக அமைந்துள்ளது. நாட்டு மக்களுக்கு நன்மையளிக்கும் சட்டங்களையும், வேலைத்திட்டங்களையும் நாம் எதிர்க்கவில்லை. தனி ஒரு மனிதரிடம் அதிகாரங்கள் அனைத்தும் ஒட்டுமொத்தமாகக் குவிக்கப்படுவதையே எதிர்க்கின்றோம்.இதனால் நாடு எதிர்காலத்தில் பாரிய பொருளாதார வீழ்ச்சியை எதிர்நோக்கும் என்பது உறுதி என்றார் சஜித் பிரேமதாஸ.

Related Posts