Ad Widget

வாழ்க்கையில் வெற்றி பெறுவதை விட வாழ்க்கை வெற்றி பெற வேண்டும் – முதலமைச்சர்

vicky0vickneswaranநீங்கள் வாழ்க்கையில் வெற்றி பெறுவதை விட உங்கள் வாழ்க்கையானது வெற்றி பெற வேண்டும் என்ற சுவாமி விவேகானந்தரின் கருத்தினை மாணவர்கள் சமுதாயமாகிய உங்கள் முன் வைக்க விரும்புகின்றேன் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியில் 60 மில்லியன் ரூபா செலவில் புதிதாக அமைக்கப்பட்ட மாணவர் தங்குமிட விடுதியின் திறப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே முதலமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

மேற்படி விடுதியானது கல்லூரியின் பழைய மாணவர் ஐயன் கே.ஸ்ரீகரனின் நிதிப்பங்களிப்பில் கட்டப்பட்டதாகும். முதலமைச்சர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,

‘எனக்கு மிகவும் கிட்டிய நண்பராக இருந்து காலஞ்சென்ற தம்பு செட்டியைச் சேர்ந்த சட்டத்தரணி சோமசுந்தரம் அவர்கள் இந்தக் கல்லூரியின் பழைய மாணவர் ஆவார். அவரின் வியப்புமிகும் கெட்டித்தனத்தைக் கண்டபோதெல்லாம் உங்கள் கல்லூரியைத் தான் என் மனம் புகழ்ந்தது.

ஊ.தாமோதரம் அவர்கள் அதிபராக 1913 தொடக்கம் 1943 வரை பதவி வகித்த காலத்தில தான் உங்கள் கல்லூரி ஹாட்லி கல்லூரி என்று பெயர் பெற்றது. வணக்கத்திற்குரிய மார்ஷல் ஹாட்லி அவர்களே உங்கள் கல்லூரியை விரிவுபடுத்த அக்காலத்தில் பெருந் தொகைப் பணத்தை இலண்டனில் இருந்து அனுப்பினார். அவர் ஞாபகமாக உங்கள் கல்லூரிக்கு அவர் பெயர் வைக்கப்பட்டது.

இலங்கைக் கல்விச் சமூகத்தினரிடையே பல வருட காலமாக உங்கள் கல்லூரிக்கு நற்பெயர் இருந்து வந்துள்ளது. பல்கலைக்கழகத்திற்கான தேர்வுப் பரீட்சைகளில் உங்கள் கல்லூரி சில பாடங்களில் காலாதிகாலமாக முன்னிலையில் இருந்து வந்துள்ளது.

அத்தகைய கல்லூரிக்கு மெருகூட்டும் வண்ணமாக இன்று இந்த மாணவ விடுதி திறக்கப்பட்டுள்ளது. உங்களுக்கு இந்தக் கொடையை வழங்கிய வள்ளல் இயன்கரன் அவர்கள் பாராட்டுக்குரியவர். அவரை முன்னர் நான் சந்தித்துள்ளேன். ‘தான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்’ என்ற உயரிய நோக்கைக் கொண்டவர் அவர். அவரின் பண உதவியும் ஊக்குவிப்புந்தான் இந்தக் கட்டிடங்களை இவ்வளவு அழகான முறையில் முடித்துக் கொடுக்க உதவின என்றால் மிகையாகாது.

பறவைகளையும், மிருகங்களையும் பார்த்தீர்களானால் பொதுவாக அவை பகிர்ந்துண்ணுவதை அவதானிப்பீர்கள். காகம் ‘கா! கா!’ என்று கரைந்து கூப்பிட்டுவிட்டே தனது உணவைப் பகிர்ந்து உட்கொள்ளும். மனிதர்களான எமக்குள்ளும் இருப்பதைப் பகிர்வதே எமது கருத்தாக இருக்க வேண்டும்.

சிலருக்கு இறைவன் போதுமான பணத்தை வாரி வழங்கியுள்ளான். சிலரிடம் அறிவைக் கொடுத்துள்ளான். சிலருக்கு நல்ல கட்டுமஸ்தான உடலைக் கொடுத்துள்ளான். சிலருக்கு அன்பையும் கருணையையும் இயற்கையாகவே அவர்கள் மனதில் மலர வைத்திருக்கின்றான். இவர்கள் ஒவ்வொருவருந் தம்மிடம் இறைவன் கொடுத்து வைத்திருப்பதை மற்றையவர்களுடன் பகிர்வதையே இறைவன் எதிர்பார்க்கின்றான்.

ஆகவே பணத்தைப் பெற்றவன் நண்பர் இயன் கரன் போன்று அதை மக்கள் நலனுக்காகப் பாவிக்க வேண்டும். அறிவைப் பெற்றவன் வருமானத்தை மட்டும் பார்க்காது அறிவைப் பெற முயல்பவர்களுடன் அவரின் அறிவைப் பகிர முன்வரவேண்டும். உடல்வலு உடையவர்கள் சிரமதானம் செய்ய முன்வரவேண்டும். மனதில் அன்பையும் கருணையையும் வைத்துக் கொண்டு அங்கிப் பையில் ஒரு சதம் இல்லாதவர்கூட தனது அன்பு வார்த்தைகளால் இன்னொருவரின் மனத்துயரைத் துடைக்க முன்வர வேண்டும்.

ஆகவே பகிர்ந்து கொள்வதை எமது மாணவர்கள் தமது வாழ்க்கையில் ஒரு பகுதியாக நடைமுறைப்படுத்தி வரவேண்டும். அரசியலில் கூட நாங்கள் அதிகாரங்களைப் பகிர்ந்து கொடுங்கள் என்றே கேட்கின்றோம். சுமூகமான வாழ்க்கை முறைக்குப் பகிர்தல் ஒரு அத்தியாவசியம் என்பதை மாணவர்களாகிய நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

மாணவப் பருவம் ஒரு மகத்தான பருவம். அதன் மேன்மையை சொல்லில் வடிக்க முடியாது. இது போன்ற ஒரு காலம் உங்கள் வாழ்க்கையில் இனி எப்போதும் வரப்போவதில்லை. உயர் படிப்புக்குப் போய் அல்லது போகாதிருந்து அதன் பின் வேலையொன்றில் ஈடுபட்டு, திருமணம் செய்து, குழந்தைகள் பெற்று, வயோதிபம் எய்தி இறைபாதங்களை அடையும் வரையில் இவ்வாறான எதற்கும் பயப்படாத, எந்த வித கரிசனைகளும் எம்மை வாட்டாத பருவம் இனிமேலும் உங்கள் வாழ்க்கையில் வராது.

தனித்துவமான ஒரு பருவம் மாணவப் பருவம். ஆனால் இந்தப் பருவத்தை நீங்கள் பாவிக்கும் விதத்தில்தான் உங்கள் எதிர்காலம் அமைந்திருக்கும். அதையும் நீங்கள் மறக்கக் கூடாது. எவ்வாறு குயவன் ஒருவன் களிமண்ணை கையாலப் பிசைந்து எடுத்து வனப்புடைய பொம்மைகளைச் செய்கின்றானோ அதேபோல் நீங்களும் உங்கள் வாழ்க்கையை வளம் மிக்கதாக ஆக்க முடியும். அதற்குத் தெய்வ நம்பிக்கையும் தன்னம்பிக்கையும் வேண்டும். அந்த நம்பிக்கையின் அடிப்படையில் நீங்கள் உங்களை வழிநடத்திச் சென்றால் நினைத்தது நடக்கும் என்பதை மறவாதீர்கள்.

ஆனால் வெற்றி என்பது நீங்கள் பங்குபற்றும் ஒவ்வொரு காரியத்திலும் நீங்கள் வெற்றி அடைவது என்று அர்த்தமில்லை. நீங்கள் எதனை விரும்பினீர்களோ அதை அடைந்தே தீருவது என்றும் அர்த்தமில்லை. அல்லது பெயர், புகழ் பெற வேண்டும் என்று கூட அர்த்தமில்லை. உங்களை நீங்கள் என்னவாறாக ஆக்கினீர்கள் என்பதிலேயே வெற்றி என்பது இருக்கின்றது. உங்கள் வாழ்க்கை, உங்கள் குணாதிசயங்கள், நீங்கள் என்னவாறாகப் பரிணாமம் பெற்றுள்ளீர்கள் என்பதில்த்தான் வெற்றி என்பது இருக்கின்றது.

எங்கள் வாழ்க்கை வெற்றி பெறும் போது உலகமானது எங்களை முழுமையாகக் கருதிப் பார்த்து நாங்கள் எவ்வாறு வாழ்கின்றோம், என்ன கருமங்களை ஆற்றுகின்றோம், என்னவாறு பரிணாமம் பெற்றுள்ளோம் என்பதை எல்லாம் எடை போடும்.

ஒரு உதாரணம் தருகின்றேன். முக்கிய பேச்சுப் போட்டி ஒன்றில் நட்பு பற்றி ஒரு மாணவன் பேசி முதற்பரிசும் பெற்று விடுகின்றான். பரிசு பெற்ற அதே நாள் தன் நண்பனுக்கு அந்தப் பேச்சாளன் துரோகம் செய்கின்றான்

நண்பனை இக்கட்டுக்குள் தள்ளி விடுகின்றான். நண்பன் செய்யாத ஒரு குற்றத்திற்குத் தண்டனை வாங்கிக் கொடுக்கின்றான். ஆகவே நட்புப் பற்றிப் பேசி முதற் பரிசை வாங்கியவன் நண்பனுக்கு நடைமுறையில் துரோகம் இழைத்து நட்பிற்கே களங்கத்தை ஏற்படுத்தி விடுகின்றான். வாழ்க்கையில் அவன் வெற்றி பெற்றாலும் அவன் வாழ்க்கை வெற்றி பெறவில்லை. கேவல நிலையையே சந்தித்தது.

மனித வாழ்க்கையை நான்காகப் பிரிக்கலாம். ஆரம்ப காலம், அபிவிருத்திக் காலம், மலருங் காலம், பழமாகும் காலம் என்று அவற்றைக் குறிப்பிடலாம். உங்கள் காலம் அபிவிருத்திக் காலம். ஆகவே வருங்காலத்தை உத்தேசித்து உங்களை நீங்கள் அபிவிருத்தி செய்யும் காலமே மாணவப் பருவம். நிலத்தை முதலில் பெற வேண்டும். அதன் பின் அதனை உழ வேண்டும். உழுது பயிர் விதைக்க வேண்டும்.

பயிர் வளர்ச்சி அடைய வேண்டும். ஈற்றில் அறுவடை செய்ய வேண்டும். இப்பொழுது நீங்கள் உழுது கொண்டிருக்கின்றீர்கள்! கல்வி என்றால் என்ன என்று தெரியுமா? கல் என்றால் தோண்டுதல். வி என்றால் ஆழமாக என்று பொருள்படும். ஆகவே ஆழமாகத் தோண்டுதலே கல்வி. ஆழமாக உழுது பயிர் விதைப்பதே மாணவப்பருவம்.

ஆகவே உரியவாறு உழுது விதைப்பதை நீங்கள் முக்கியமான காரியங்களாக அடையாளம் கண்டு இந்த மாணவப் பருவத்தை வீணடிக்காது பார்த்துக் கொள்ள வேண்டும். உங்கள் பருவத்தை வீணடிக்க இந்திரிய சுகங்கள் பல உங்கள் முன் அடையாளப்படுத்தப்படுகின்றன. அவற்றிற்கு அடிமையானால் வருங்காலத்திற்கு ஏற்ற ஒரு மனிதனை நீங்கள் உருவாக்காது கடமையில் தவறி விடுவீர்கள்.

உங்கள் கடமைகள் என்ன என்று பார்த்தோமானால் உங்கள் வாழ்க்கைக்கு அத்திவாரம் இடுங்காலம் இக் காலம். அதன் பொருட்டு அறிவுபூர்வமான, சரியான, உங்கள் நல உரித்தை நோக்கிய, எக்காலமும் மனதிற்கு மகிழ்வையூட்டுவதான பூர்வாங்கக் காரியங்களில் நீங்கள் இறங்க வேண்டும்.

இதைத்தான் எங்கள் முன்னோர்கள் பிரமச்சாரிய வாழ்க்கை என்று குறிப்பிட்டார்கள். உடல், உள்ளம், மனம், அறிவு, ஆத்மா ஆகிய அனைத்திற்கும் வலுவூட்டும் விதத்தில் கல்வியையுங் கற்றுத் தன்னடக்கம் தரவல்ல தேகப்பயிற்சிகளிலும் ஈடுபட்டு, உங்களைச் சுற்றியுள்ளவர்களுடன் தர்மத்தின் அடிப்படையில் கொண்டொழுகி வரப்பாடுபட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

Related Posts