Ad Widget

வாக்கு எண்ணும்போது குளறுபடிகள் எதுவும் நடக்கவில்லை என்றார் அரச அதிபர்!

யாழ்.மாவட்டத்தில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலானது உண்மையாகவும் நேர்மையாகவும் நடை பெற்றுள்ளது. ஆனால் ஒரு சில ஊடகங்கள் உண்மைக்குப் புறம்பாக செய்திகளை வெளியிட்டு பிழையான தகவல்களை மக்களுக்கு வழங்க முனைகின்றன என யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்துள்ளார்.

யாழ்.மாவட்ட செயலகத்தில் இன்று வியாழக்கிழமை நண்பகல் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் ஊடகவியலாளர் சந்திப்பு இடம்பெற்றது.

இதன்போது கருத்துக் கூறிய யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் நா.வேதநாயகன் – மிகவும் திறந்த முறையில் வாக்கு எண்ணும் பணிகள் இடம்பெற்றுள்ளன. இதில் எந்த வகையான குளறுபடிகளையும் யாரும் செய்ய முடியாது அனைத்து வேட்பாளர்களின் பிரதிநிதிகள் மற்றும சுமார் நாற்பத்தைந்துக்கும் மேற்பட்ட ஊழியர்களையும் உள்ளடக்கிய முறையில்தான் வாக்கு எண்ணும் பணிகள் நடைபெற்றன.

இதனால் எந்த வகையான குளறுபடிகளும் செய்யப்பட முடியாது. அப்படி ஏதாவது நடந்திருந்தால் உடனடியாக பிரதான கணக்கெடுப்பு அலுவலருக்கு முறையிட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கலாம். ஒரு வேட்பாளர், வாக்கு இலக்கங்களை கருத்தில் கொள்ளாது வாக்கு சீட்டுக்களை ஒரு பெட்டியில் போடப்பட்டன எனத் தெரிவிக்கப்பட்ட குற்றச் சாட்டு சம்பந்தமாக உடனடியாக உயர் அதிகாரியை அனுப்பி அவரின் முன்பாக உரிய சீட்டுக்கள் பரிசோதனை செய்யப்பட்டு எத்தகைய தவறும் இடம் பெறவில்லையென்பது உறுதிப்படுத்தப்பட்டது.

இந்த வகையில் தேவையற்ற முறையில் தமது அரசியல் விருப்பு வெறுப்புக்கு ஏற்ப உண்மைக்குப் புறம்பாக செய்திகளை வெளியிட்டு நேர்மையாக உழைத்த ஊழியர்களை குற்றம் சாட்டுவது ஏற்றுக்கொள்ள முடியாது. குறிப்பாக எந்த வகையான பிழைகளும் நடக்கவில்லை. அப்படி இருந்தாலும் கூட இன்றும் கூட நீதிமன்றம் சென்று மீள எண்ணுவதற்கான அனுமதியை பெற முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.

இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் மேலதிக அரசாங்க அதிபர் பா.செந்தில்நந்தனன், உதவி தேர்தல் ஆணையாளர் அகிலன், தலைமைப்பீட உதவி அரசாங்க அதிபா சா. சுதர்சன் கிருஸணலிங்கம் ஆகியோர்களும் கலந்துகொண்டனர்.

Related Posts