Ad Widget

வாக்குறுதிகளை த.தே.கூ நிறைவேற்றினால் வரவேற்போம்: டக்ளஸ்

KN-daklasவட மாகாண சபைத் தேர்தலில் தமிழ் பேசும் மக்களிடம் இருந்து பெற்ற ஆணையை ஏற்று தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற முன் வரவேண்டும். அவ்வாறு நிறைவேற்றினால் அதை நாம் எமது மக்களின் நிரந்தர மகிழ்ச்சிக்காக வரவேற்கத் தயாராக இருப்பதாக’ ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும், அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

அவ்விடயம் தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

‘நடந்து முடிந்த தேர்தலில் தமிழ் பேசும் மக்கள் ஆர்வத்துடன் வாக்களிக்க முன்வந்திருப்பதும், நீதியானதும், நேர்மையானதுமான தேர்தலை நடத்த ஒத்துழைத்தமையும் வரவேற்கத்தக்க விடயம். அதற்காக நாம் வாக்களித்த அனைத்து மக்களுக்கும் நன்றி கூறுகின்றோம். இதேவேளை, எமது வழிமுறைகளை ஏற்று எமக்கு வாக்களித்த மக்களுக்கும் விஷேடமாக நாம் நன்றி கூறுகின்றோம்.

மக்கள் எமக்கு ஆணை வழங்கினால் எமது நடைமுறை சார்ந்த வழிமுறை மூலம் மாகாணசபை அதிகாரத்தை பாதுகாத்து மேலும் பலப்படுத்துவதன் ஊடாக தமிழ் பேசும் மக்களின் அரசியலுரிமை, அபிவிருத்தி, படையினரை படிப்படியாக வெளியேற்றுதல், மீள்குடியேற்றம், மற்றும் வாழ்வியல் உரிமைகள் என நாம் சகலதையும் பெற்றுத் தருவோம் என மக்களுக்கு வாக்குறுதிகளை வழங்கியிருந்த அதேவேளை, தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் தமக்கு மக்கள் ஆணை வழங்கினால் இராணுவத்தினரை உடனடியாக வெளியேற்றி மக்களை மீள்குடியேற்றம் செய்வதாகவும், அபிவிருத்தி, மற்றும் அரசியலுரிமைகளை பெற்றுத் தருவதாகவும் மக்களுக்கு வழமைபோல் வாக்குறுதி வழங்கியிருந்தனர்.

இந்நிலையில், பெரும்பான்மையான தமிழ் பேசும் மக்களின் வாக்குகளை தமிழ் தேசியக் கூட்டமைப்பினரே ஆணையாக பெற்றிருக்கின்னறனர். ஆகவே, கடந்தகாலங்களில் மக்களிடமிருந்து ஆணைகளைப் பெற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியது போலன்றி வடமாகாணசபைத் தேர்தலில் மக்கள் வழங்கிய ஆணையை ஏற்று மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை விரைவாக நிறைவேற்ற முன்வர வேண்டும்.

அவ்வாறு நிறைவேற்றும் பட்சத்தில் நாம் அதை எமது மக்களுக்காக அகமகிழ்வுடன் வரவேற்கும் அதேவேளை, இதனூடாகவே தமிழ் பேசும் மக்கள் தோற்றுப்போனவர்களல்ல என்ற நிலையை தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் உருவாக்க முன்வர வேண்டுமென்றும்’ அந்த அறிக்கையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேலும் குறிப்பிடப்பட்டுள்ளார்.

Related Posts