Ad Widget

வாக்குச்சீட்டுகளில் VIP என்று எழுதி வாக்குகளை செல்லுபடியற்றதாக்குவோம் : வேலையற்ற பட்டதாரிகள்

மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் மற்றும் அவர்களின் உறவினர்கள் எதிர்வரும் உள்ளூராட்சி சபை தேர்தலில் வாக்குரிமையினை போராட்ட ஆயுதமாக பயன்படுத்தவுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் தலைவர் எஸ்.சிவகாந்தன் தெரிவித்தார்.

மட்டக்களப்பில் நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

எமது வேலையற்ற பட்டதாரிகளின் தொழிலுரிமைப் போராட்டமானது கடந்த 2017 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 21 ஆம் திகதி தொடர் சத்தியாக்கிரகப் போராட்டமாக ஆரம்பிக்கப்பட்டு இன்று வரை வீரியமான முறையில் எமக்கான தொழிலுரிமையை வேண்டி போராட்டம் நடத்திச் செல்லப்படுகின்றது.

அந்த சத்தியாக்கிரக போராட்டத்திலே எங்களால் மேற்கொள்ளப்பட்ட இடைவிடாத முயற்சியின் பிரகாரம் கிழக்கு மாகாணத்திலுள்ள 1127 பட்டதாரிகளுக்குரிய நியமனம் கிடைத்தது. இது எங்களுடைய இடைவிடாத போராட்டத்தின் சிறு வெற்றியாகும்.

போராட்ட காலப்பகுதியில் எம்முடைய இனத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல்வாதிகள் எமக்கான தொழிலுரிமையை பெற்றுத்தர மறுக்கின்ற சந்தர்ப்பத்தில் இனிவரும் எந்த தேர்தலிலும் வாக்களிக்காமல் வி.ஐ.பி என அங்கு முத்திரையிட்டு அவ்வாக்குகளை செல்லுபடியற்ற வாக்குகளாக செலுத்துவோமென்ற உறுதிமொழியை சத்தியாக்கிரக போராட்ட காலத்தில் எடுத்திருந்தோம்.

அதன் பிரகாரம் அந்த வாக்குறுதியை நடைமுறைப்படுத்த வேண்டிய சூழ்நிலை தற்பொழுது நாட்டில் கொண்டுவரப்பட்டுள்ள உள்ளூராட்சிசபைத் தேர்தலில் ஏற்பட்டுள்ளது.

எனவே, கிழக்கு மாகாணத்திலும் ஏனைய மாகாணங்களிலும் உள்ள வேலையற்ற பட்டதாரிகளும் அவர்களின் குடும்பங்களும் நண்பர்கள், ஆதரவாளர்கள் அனைவரும் எங்களது எதிர்பினை இந்த அரசியல்வாதிகளுக்கு தெரியதப்படுத்தும் வண்ணம் வாக்குச்சீட்டுகளில் வி.ஐ.பி என்று எழுதி அந்த வாக்குகளை செல்லுபடியற்ற வாக்குகளாக அளிக்க இருக்கின்றோம்.

எங்களுக்கான தொழிலுரிமை மறுக்கப்படுகின்ற போது எங்களுக்குள்ள ஒரேயொரு உரிமை வாக்குரிமையாகும். அந்த வாக்குரிமையை நாங்கள் எங்களுடைய போராட்ட ஆயுதமாக பயன்படுத்த முடிவெடுத்துள்ளோம்.

இந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் இவ்வாறானதொரு போராட்டமாக எங்களுடைய போராட்டம் அமையும். எதிர்வரும் மாகாணசபைத் தேர்தலில் எங்களுடைய தொழிலுரிமைப் பிரச்சனை தொடருமாயின் கிழக்கு மாகாணத்திலுள்ள ஒட்டுமொத்த பட்டதாரிகளும் எந்தவொரு அரசியல் கட்சியினதும் பின்பலம் இல்லாமல் தன்னிச்சையான குழுவாக செயற்பட்டு அரசியலையும் எதிர்கொள்ள தயாராக உள்ளோம் என்பதனை எமது நாட்டிலுள்ள அனைத்து அரசியல்வாதிகளுக்கும் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றோம்.

நாங்கள் 155 நாட்களாக போராட்டம் நடத்தியிருந்தோம். அந்த போராட்ட காலப்பகுதியில் பல அரசியல் பிரமுகர்களை நாங்கள் நாடியிருந்தோம். அவர்கள் எங்களுடைய போராட்ட களத்திற்கு வருகை தந்து பல வாக்குறுதிகளை வழங்கியிருந்தனர். ஆனால் அவர்கள் எங்களுடைய பிரச்சனையை பாராளுமன்றத்திற்கு கொண்டு சென்று பேசி எந்தவொரு முடிவையும் பெற்றுத் தரவில்லை.

ஆகையால் நாங்கள் எங்களுடைய வாக்குரிமையை அவர்களுக்கு எதிராக பயன்படுத்த முடிவெடுத்துள்ளோம். ஏனெனில் எங்களுக்குள்ள ஒரேயொரு உரிமை அது மட்டுமேயாகும். தேர்தல் காலங்களில் வாக்களிக்க மாட்டோமென போராட்ட காலத்தில் நாங்கள் செய்துகொண்ட சத்தியத்தை நிறைவேற்றுகின்ற தருணம் இதுவாகும்.

நாங்கள் மட்டுமல்லாது எங்களுடைய குடும்பத்தினர், நண்பர்கள், கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் ஒட்டுமொத்தமாக இனிவரவிருக்கின்ற பட்டதாரிகளும் இணைந்து வாக்குச்சீட்டுகளில் வி.ஐ.பி (வேலையற்ற பட்டதாரிகள்) என முத்திரையிட்டு அரசியல்வாதிகளுக்கு தக்க பாடம் புகட்டுவோம்.

அடுத்த மாகாணசபைத் தேர்தலுக்கு முன்னதாக எங்களுடைய பிரச்சனைக்கு ஒரு தீர்வு கிடைக்காத சந்தர்ப்பத்தில் வேலையற்ற பட்டதாரிகளான நாங்கள் அந்த தேர்தலில் பெரியதொரு தாக்கத்தினை ஏற்படுத்துவோம்.

ஜனாதிபதி அண்மையில் உறுதிமொழிகளை வழங்கினாலும் கடந்த காலத்திலும் அவர் பல உறுதிமொழிகளை வழங்கி நிறைவேற்றப்படவில்லை எனவும் அவர் இங்கு சுட்டிக்காட்டினார்.

எனினும் எங்களது பிரச்சினையை அவர் கேட்பதற்கும் அதற்கான நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்தமையானது மகிழ்ச்சியளிப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Related Posts