Ad Widget

வவுனியா தமிழ் கிராமத்தில் 300 சிங்கள குடும்பங்கள் குடியேற்றம்: செல்வம் எம்.பி

வவுனியா, கள்ளிக்குளம், பெரியபுளியங்குளம் என்ற தமிழ் கிராமத்தில் 300 சிங்கள குடும்பங்களை மீள்குடியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

selvam-adaikkalanathan

இது தொடர்பில் அவர் இன்று (20) வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

வவுனியாவில் அண்மைக் காலமாக பல தமிழ் கிராமங்களில் சிங்கள குடும்பங்கள் குடியேற்றப்பட்டு, தமிழ் மக்கள் மத்தியில் இன சிதைப்பை மேற்கொள்ள முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அந்தவகையில் தமிழ் மக்களின் பூர்வீக கிராமமான கள்ளிக்குளத்திற்கு அருகாமையில் உள்ள பெரியபுளியங்குளத்தில் 300 சிங்கள குடும்பங்களை குடியேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.

இக்கிராம மக்கள், பல்வேறு இடப்பெயர்வுகளை சந்தித்து இன்று பல இடங்களிலும் வாழ்ந்து வருகின்றனர். அது மட்டுமன்றி அவர்களின் பல விவசாய நிலங்களும் இப்பகுதியில் உள்ள நிலையில் இக்குடியேற்றம் இடம்பெறுக்கின்றது.

இவ்வாறான நடவடிக்கைகளுக்கு அரசினால் வவுனியா மாவட்டத்தில் நியமிக்கப்பட்டுள்ள அரச உயரதிகாரிகள் துணை போய்க்கொண்டுள்ளனர்.

இவ்வாறான தமிழ் கிராமங்களில் மேற்கொள்ளப்படும் குடியேற்றங்கள் எமது இனத்தின் மீது ஏவி விடப்பட்டுள்ள இன சிதைப்பாகவே கருதுகின்றேன்.

அரசும் அவர்களின் செல்லப்பிள்ளைகளான அமைச்சர்கள் சிலரும் தமது சமூகம் சார்ந்த நன்மைகளையே பார்வையிட்டுக்கொண்டிருக்கின்றனர்.

அந்தவகையிலேயே தற்போது குடியேற்றம் செய்யப்படும் பெரியபுளயங்குளம் கிராமத்திலும் வீதிகள், வீட்டு வசதிகள் என அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு வருகின்றது.

எனினும் அருகில் உள்ள கள்ளிக்குளத்தில் கடந்த 4 வருடங்களாக மீள்குடியேறியுள்ள தமிழ் மக்களுக்கு எவ்வித அடிப்படை வதிகளும் செய்து கொடுக்கப்படவில்லை.

இவ்வாறான செயற்பாடுகளை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் நாம் வன்மையாக கண்டிக்கின்றோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Posts