Ad Widget

வவுனியா அரச அதிபருக்கு எதிராக நடவடிக்கை வேண்டும்

வடக்கு மாகாண சபை உறுப்பினர்களை அவமதித்தமை தொடர்பில் வவுனியா மாவட்ட அரச அதிபருக்கு எதிராக பிரேரணை ஒன்று சுகாதார அமைச்சர் சத்தியலிங்கத்தினால் சபையில் கொண்டுவரப்பட்டு ஏகமானதாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது .

வீட்டுத்திட்டத்தில் முறைகேடு ஏற்பட்டுள்ளமை தொடர்பில் வவுனியா சிதம்பரபுரம் மக்கள் கடந்த 2ஆம் திகதி கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றினை மேற்கொண்டிருந்ததுடன் அரச அதிபரிடம் மகஜர் ஒன்றினை வழங்கவும் ஏற்பாடு செய்திருந்தனர்.

இந்த நிலையில் குறித்த மக்களை மாவட்ட செயலகத்திற்கு உள்ளே சென்று மகஜரை வழங்க பொலிஸார் தடை விதித்தனர். இதனால் மக்கள் குழப்பமடைந்திருந்தனர்.

அந்தவேளையில் வீதியால் சென்ற வடக்கு மாகாண சபை உறுப்பினர் லிங்கநாதனை வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அழைத்து ஐவர் கொண்ட குழுவினை மட்டுமே உள்செல்ல வசதி ஏற்படுத்தித் தருமாறு கோரியிருந்தார்.

அதற்கமைய மக்களுடன் கலந்துரையாடிய உறுப்பினர் ஐவருடன் ஒருவராக அரச அதிபரின் அறைக்குச் சென்றனர். அதன்போது இந்த போராட்டத்தை ஏற்பாடு செய்தது நீங்களா என்று கேள்வியெழுப்பியிருந்தார்.

அதற்கு உறுப்பினர் இல்லை என தெளிவாக பதிலளித்திருந்தார். அவ்வாறு என்றால் வெளியில் போகலாம் என்றும் தான் மக்களுடன் பேசுவதாகவும் தெரிவித்து உறுப்பினரை வெளியில் அனுப்பினார் அரச அதிபர்.

அதனையடுத்து வன்னிநாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் வவுனியாவில் உள்ள வடக்கு மாகாண சபையின் உறுப்பினர்கள் , அமைச்சர்களுக்கும் தெரியப்படுத்தப்பட்டது.

அதனையடுத்து அனைவரும் இணைந்து அரச அதிபருடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டனர் .அதன்போது நீங்கள் எங்கு சென்றும் முறையிடலாம் சட்டம் இதுவே என அவமரியாதையுடன் பேசியிருந்தார்.

இதனையடுத்து முதலமைச்சர், அவைத்தலைவர் மற்றும் ஜனாதிபதிக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களதும் மாகாண சபை உறுப்பினர்களதும் கையயெழுத்திடப்பட்ட கடிதம் ஒன்று விடயம் குறித்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

எனவே குறித்த அரச அதிபருக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு வடக்கு மாகாண சபை ஜனாதிபதியிடம் கோர வேண்டும் என்ற பிரேரணை முன்வைக்கப்பட்டது.

சபையில் குறித்த பிரேரணை ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டு முதலமைச்சர் இது குறித்து ஜனாதிபதியிடம் கோருவதுடன் நடவடிக்கைக்கான நடவடிக்கையும் எடுக்கப்படும் என சபையில் அறிவிக்கப்பட்டது.

Related Posts