Ad Widget

வவுனியா அரசியல் கைதிகளில் ஒருவர் அடித்துக்கொலை! ஒருவர் கோமா நிலையில்! பலரின் நிலை கவலைக்கிடம்:வெலிக்கடை படுகொலையினை ஞாபகமூட்டுகிறது

வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையிலிருந்து அனுராதபுரம் மற்றும் அதன்பின்னர் மகர சிறைக்கு மாற்றப்பட்ட நிலையில் தமிழ் அரசியல் கைதி நிமலரூபன் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அங்கு தமிழ் அரசியல் தலைவர்களிடையே பெரும் விசனத்தை ஏற்படுத்தியிருக்கிறது.நிமலரூபன் சிறைச்சாலை வைத்தியசாலையில் உயிரிழந்த பின்னரே அவரது உடல் றாகமை வைத்தியசாலைக்கு ண்டுசெல்லப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் சிறைக்காவலர்கள் மூவரை பணயமாக வைத்து போராட்டம் நடத்தியதாகக் கூறப்படுகின்ற தமிழ் அரசியல் கைதிகளில் 22 பேரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்றக் குழுவினர் மகர சிறைச்சாலையில் நேற்று பார்வையிட்டனர்.

இவர்களில் ஆறுபேர் மகர சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் அவர்களது நிலைமை மோசமானதாக இருப்பதாகவும் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

மகர சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த மற்றுமொரு கைதியான வவுனியா நெளுக்குளத்தைச் சேர்ந்த கணேசன் நிமலரூபன் (28 வயது) நேற்று அதிகாலையே அங்கு உயிரிழந்துள்ளார்.

இறந்த பின்னரே அவரது உடல் றாகம அரச வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டிருப்பதாகவும் மேலும் நான்கு பேர் றாகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருபவர்களில் ஒருவர் கோமா நிலையிலும், ஏனைய மூவரில் ஒருவருக்கு இரண்டு கால்களும் அடித்து முறிக்கப்பட்டிருப்பதாகவும் மற்றொருவருக்கு ஒரு கால் அடித்து முறிக்கப்பட்டுள்ளதாகவும் ஒருவருடைய காலில் துப்பாக்கிச் சூட்டுக்காயம் காணப்பட்டதாகவும் சுரேஷ் பிரேமச்சந்திரன் குறிப்பிட்டார்.

இதேவேளை மற்றுமொருவர் அனுராதபுரம் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மகர சிறைச்சாலையில் காயமடைந்த நிலையில் 16 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

தமிழ் அரசியல் கைதிகள் இவ்வாறு மோசமான முறையில் தாக்கப்பட்டிருப்பது பாரதூரமான மனித உரிமை மீறல் என்றும் இந்த விடயம் குறித்து நாடாளுமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டுவரவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

தம்மை விடுதலை செய்யுமாறும் அல்லாது போனால் தம்மீதான குற்றச்சாட்டுக்களை நீதிமன்றத்தில் நிரூபிக்குமாறும் கோரி, வவுனியா சிறைச்சாலையிலுள்ள அரசியல் கைதிகள் ஜுன் பிற்பகுதியில் போராட்டமொன்றை ஆரம்பித்திருந்தனர்.

இந்தப் போராட்டத்தின் புதிய திருப்பு முனையாக இரண்டு சிறைக்காவலர்களை பணயம் வைத்து அவர்கள் புதிய போராட்டம் ஒன்றையும் அண்மையில் நடத்தியிருந்தனர்.இதனையடுத்து, சிறைக்காவலர்களை மீட்பதற்காக பொலிசார் மற்றும் இராணுவத்தினர் மேற்கொண்ட நடவடிக்கையால், 7 மணி நேரப் பணயப் போராட்டம் முடிவுக்கு வந்தது.இதன்பின்னர் கைதிகள் மீது மேற்படி கொலை வெறித்தாக்குதல் கட்டவிழ்த்து விடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.இத்தாக்குதல் வெலிக்கடைச்சிறைச்சாலையில் 3 தசாப்தங்களின் முன்னர் கட்டவிழ்த்துவிடப்பட்ட கொலைவெறித்தாக்குதலை நினைவு படுத்துவதாகவும் இன்னமும் சிங்களவர்கள் தமிழர்களை இனத்துவேசத்துடன் தான் நோக்குவதாகவும் அரசியல் அவதானிகளால் கருத்து தெரிவிக்கப்படுகிறது.

Related Posts