Ad Widget

வவுனியாவில் வீட்டுத்திட்டம் கோரி உண்ணாவிரதப் போராட்டம்

வவுனியா, செட்டிகுளம் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட அடப்பன்குளம் மக்கள் தமக்கு வீட்டுத்திட்டம் வழங்க வேண்டும் என கோரி இன்று காலை முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அடப்பன்குளம் அம்மன் கோவில் வளாகத்தில் காலை 8 மணிக்கு ஆரம்பமான இவ் உண்ணாவிரதப் போராட்டத்தில் வீட்டுத்திட்டம் கிடைக்காத 20பேர் வரையில் கலந்து கொண்டுள்ளனர்.

தமது கிராமத்திற்கு வழங்கப்பட்ட வீட்டுத்திட்டம் திடீரென வேறு கிராமத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் அதற்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை எனவும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவித்தனர்.

இதேவேளை, இக்கிராம மக்கள் தாம் 1984ஆம் ஆண்டு யுத்த அனர்த்தத்தால் இடம்பெயர்ந்து இந்தியா மற்றும் மன்னார் ஆகிய பிரதேசங்களில் வாழ்ந்து மீண்டும் மீள்குடியேறி 7 வருடங்களாகிய போதிலும் 20 குடும்பங்களுக்கு வீட்டுத்திட்டம் புறக்கணிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கின்றனர்.

இந் நிலையில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டவர்கள் ‘எமது மதிப்பு மிகு பாராளுமன்ற உறுப்பினர்களே எங்கள் கிராமம் உங்கள் கண்ணுக்கு தெரியவில்லையா தேர்தல் காலங்களில் மட்டுமா தெரியும்?

எமது கிராமத்திற்கான முடிவு கிடைக்கும் வரை எமது போராட்டம் தொடரும், மீள்குடியேற்ற அமைச்சர் சுவாமிநாதன் ஐயா வருகைத் தந்து உறுதி தரவேண்டும் போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை தாங்கியிருந்தனர்.

Related Posts