Ad Widget

வல்வெட்டித்துறையில் இருந்து சென்று குருநாகலில் போட்டியிட முடியாதா? – சிவாஜிலிங்கம்

மஹிந்த ராஷபக்ஷவிற்கு அம்பாந்தோட்டையில் இருந்து வந்து குருநாகலில் போட்டியிட முடியுமாயின், வல்வெட்டித்துறையில் இருந்து வந்து என்னால் மட்டும் ஏன் குருநாகலில் போட்டி இட முடியாது என வடமாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கேள்வி எழுப்பியுள்ளார்.

வேட்புமனுத் தாக்கல் செய்த பின்னர் இனவாதத்தை தூண்டுவதற்காகவா குருநாகலில் போட்டியிடுகின்றீர்கள் என சிங்கள ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு தான் இவ்வாறு பதிலுக்கு கேள்வி எழுப்பியதாக அவர் குறிப்பிட்டார்.

யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

குருநாகல் மாவட்டத்தில் வீடு வீடாக சென்று பிரசாரத்தினை எமது அணி மேற்கொள்ளப் போவதில்லை. பொதுக் கூட்டங்களை அங்கு நடாத்துவதற்கான சூழலும் இல்லை. இலங்கையில் மிகப்பெரியளவில் இராணுவ வீரர்களையும், போரின் போது கொல்லப்பட்ட இராணுவ வீரர்களின் குடும்பங்களும் வாழும் இடம் தான் குருநாகல் மாவட்டம்.

இதன் காரணமாக தான் போர் வெற்றியைக் கொண்டாடிய மஹிந்த ராஜபக்ஷ குருநாகல் மாவட்டத்தில் களமிறங்கியிருக்கின்றார்.

போர்க்குற்றத்தில் சர்வதேச நீதிமன்றில் மஹிந்த ராஜபக்ஷவை நிறுத்துவதை தடுப்பதற்காக இலங்கை கையொப்பமிடவில்லை. அடுத்த 5 வருடங்களுக்குள் நாடாளுமன்றத்தில் இனவாத குப்பையில், மோதி எமது பிரச்சினையினை தள்ளிக்கொண்டு போனால், சர்வதேச தலையீட்டினை கோருவதை விட வேறு வழியில்லை.

இலங்கையில் உள்ள அரசியல் தீர்வில் நம்பிக்கை கிடையாது. சர்வதேச மத்தியஸ்தம் மட்டுமே வழி வகுக்கும். உங்களால் முடியாமல் போனால் வடக்கு கிழக்கில் பொது சன வாக்கெடுப்பினை நடாத்தி, எமது தலைவிதியினை நாங்களே தீர்மானிக்கின்ற நிலையை உருவாக்குவோம் என்பதனை எச்சரிக்கை செய்யும் முகமாக இந்த தேர்தலில் களமிறங்கியிருக்கிறோம்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கும், அதற்கு துணைபோகும் மைத்திரிபால சிறிசேனவிற்கும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் எச்சரிக்கை விடுக்கும் முகமாகவே குருநாகல் மாவட்டத்தில் களமிறங்கியிருக்கிறேன் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

Related Posts