Ad Widget

வல்லிபுரம் ஆழ்வார், சந்நிதி முருகன் ஆலயங்களில் பொலிஸ் மா அதிபர் வழிபாடு

வடக்கு மாகாணத்தில் சட்டம் ஒழுங்கு தொடர்பில் நேரில் ஆராய்வதற்கு பொலிஸ் மா அதிபர் சீ.டீ. விக்ரமரத்ன நாளை கிளிநொச்சியில் கூட்டம் ஒன்றை நடத்தவுள்ள நிலையில் இன்று யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்தார்.

இன்று நண்பகல் யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த அவர் வரலாற்றுச் சிறப்புமிக்க வல்லிபுரம் ஆழ்வார் ஆலயம், தொண்டமானாறு செல்வச் சந்நிதி முருகன் ஆலயத்தில் வழிபாடுகளில் ஈடுபட்டார்.

நாளைய கூட்டத்துக்காக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர்கள், மூத்த பொலிஸ் அத்தியட்சகர்கள், பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள் மற்றும் மாகாண மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஆகியோருக்கு அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.

வடக்கு மாகாணத்தில் சட்டம் ஒழுங்கு நிலமைகள், பொலிஸ் துறையில் உள்ள குறைபாடுகள் தொடர்பில் பொலிஸ் மா அதிபர் சீ.டீ. விக்ரமரத்ன நாளை ஆராயவுள்ளார்.

இதேவேளை இந்து மத நியமிகளை மதிக்காமல் வரலாற்றுச் சிறப்புமிக்க வல்லிபுர ஆழ்வார், தொண்டமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலயங்களுக்குள் சப்பாத்துடன் சென்ற பொலிஸ் அதிகாரி தொடர்பில் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

காங்கேசன்துறை பிராந்தியத்துக்குப் பொறுப்பான மூத்த பொலிஸ் அத்தியட்சகர் கொட்டாச்சி என்பவரே இவ்வாறு மத நியதிகளை மீறி ஆலயங்களுக்குள் சப்பாத்துடன் சென்றுள்ளார்.

பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட பொலிஸ் அதிகாரிகள் ஆலய வெளி வீதியில் சப்பாத்துக்களை கலற்றிவிட்டு ஆலயங்களுக்குள் சென்று வழிபாடுகளை முன்னெடுத்த நிலையில் காங்கேசன்துறை மூத்த பொலிஸ் அத்தியட்சகர் சப்பாத்துக்களை கழற்றாது ஆலயங்களுக்குள் சென்றுள்ளார்.

Related Posts