Ad Widget

வலி.வடக்கில் 400 ஏக்கரில் எதிர்வரும் 23 ஆம் திகதி மீள்குடியேற்றம்! ஆரம்பிக்க ஜனாதிபதியும் பிரதமரும் வருகை

ஏற்கனவே அறிவிக்கப்பட்டதன் அடிப்படையில் வலி.வடக்கு உயர் பாதுகாப்பு வலய பகுதியில் 1000 ஏக்கரை விடுவிப்பது என்ற அறிவிப்பின் படி முதற்கட்டமாக 400 ஏக்கரை விடுவித்து, அதில் மக்களை மீளக்குடியமர்த்த திட்டமிடப்பட்டுள்ளது.

sumantheran

இந்த நிகழ்வு எதிர்வரும் 23ஆம் திகதி நடைபெறவுள்ளது. இந்த நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகிய இருவரும் கலந்துகொள்வர். – இவ்வாறு தெரிவித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்.

இலங்கைத் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் விருது வழங்கும் நிகழ்வு நேற்று செவ்வாய்க்கிழமை கொழும்பு தமிழ்ச் சங்க மண்டபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:-

வலி.வடக்குப் பகுதியில் படையினர் வசமுள்ள காணிகளில் ஆயிரம் ஏக்கரை நிலச் சொந்தக்காரர்களிடமே கையளிக்க 3 கிழமைகளில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கடந்த பெப்ரவரி மாதம் 27 ஆம் திகதி மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்திருந்தார்.

இதன் முதற்கட்டமாக உயர்பாதுகாப்பு வலயத்துக்குள் அமைந்திருந்த வலி.கிழக்கு பிரதேச செயலகத்துக்குட்பட்ட வளலாய் கிராமத்துக்கு மக்கள் அழைத்துச் செல்லப்பட்டு தமது காணிகளை பார்வையிட அனுமதிக்கப்பட்டனர். குறிப்பாக கோப்பாய் பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட வளலாய் ஜே/284 கிராம அலுவலர் பிரிவில் உள்ள 236 ஏக்கர் காணியில் மக்களை மீளக்குடியமர்த்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

இவற்றைவிட, குறித்த பகுதியை அண்டிய மேலுமொரு கிராமத்தையும் சேர்த்து 400 ஏக்கர் நிலப்பரப்பில் மக்களை மீளக்குடியமர்த்த அரசு திட்டமிட்டுள்ளது.

இந்த நிகழ்வு எதிர்வரும் 23 ஆம் திகதி நடைபெறும். இந்த நிகழ்வுக்கு ஜனாதிபதியும், பிரதமரும் வருகைதருவர். ஏனைய 600 ஏக்கர் காணிகளும் அடுத்த இரு மாதங்களுக்குள் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு எம்மிடம் உறுதியளித்துள்ளது.

இதேவேளை பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு மற்றும், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள, ஆவணங்களின் படி, சிறிலங்காவில் 275 அரசியல் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்ற விவரமும் எம்மிடம் கிடைத்துள்ளன.

அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக, சொலிசிற்றர் ஜெனரல் சுகந்த கம்லத்தினால் அமைக்கப்பட்ட குழுவின் முதலாவது கூட்டம் நேற்று சட்டமா அதிபர் திணைக்களத்தில் நடந்தது. இந்தக் கூட்டத்திலேயே, பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு மற்றும், குற்றப் புலனாய்வுத் திணைக்களம் என்பன, தம்மிடம் உள்ள அரசியல் கைதிகள் பற்றிய ஆவணங்களைச் சமர்ப்பித்தன.

அவற்றில் உள்ள தரவுகளை நாம் பரிசீலித்த போது, 275 அரசியல் கைதிகள் பற்றிய பதிவுகள் உள்ளமை தெரியவந்தது.

இவர்களில் மூன்று வகைப்பட்ட கைதிகள் இருக்கின்றனர். நீதிமன்றம் ஊடாகத் தண்டனை பெற்ற கைதிகளுக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு குறித்தும், ஏனைய கைதிகளை விடுவிப்பது குறித்தும் மேலதிக நடவடிக்கைகள் குறித்தும் அரசுடன் நாம் தொடர்ந்து பேசிவருகிறோம்.- என்றார்.

Related Posts