Ad Widget

வலி வடக்கில் 1500 ஏக்கர் காணிகளில் மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ளது

வலிவடக்கு பகுதியில் இந்த வருடம் 1500 ஏக்கர் காணிகளில் மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட் காணி மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன் தெரிவித்தார்.

யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் நேற்று செவ்வாய்க்கிழமை யாழ்.மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு தலைவர் சீ.வி.விக்னேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மீள்குடியேற்றம் குறித்த கலந்துரையாடலின் போது, யாழ்.மாவட்டத்தில் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட காணிகள் குறித்து விளக்கமளித்தார்.

அதன்போது, மீள்குடியேற்ற அமைச்சினால் ஒதுக்கப்பட்ட 3500 மில்லியன் ரூபா நிதியில் வீட்டுத்திட்ட வேலைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. வீட்டுத்திட்டத்தின் அடிப்படையில் 3565 வீடுகள் ஒக்டோபர் மாதம் நிறைவுசெய்ய வேண்டியுள்ளது. இதுவரையில் 48 வீடுகள் முடிவடைந்துவிட்டன. 1423 வீடுகள் முடிவுறும் நிலையில் இருக்கின்றன.

ஏனைய வீடுகள் அடுத்த வருட இறுதிக்குள் முடிவுறுத்தப்படும். நலன்புரி முகாம்களில் உள்ள மக்களில் காணிகளற்றவர்களுக்கு முதற்கட்டமாக கீரிமலைப் பகுதியில 133 வீடுகள் கட்டிக்கொடுக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மீள்குடியேற்ற அமைச்சின் ஏற்பாட்டில் இராணுவத்தினரால் கட்டப்பட்டு வருகின்றது. இவ்வீடுகள் முடிவுறும் தருவாயில் இருப்பதனால் மிக விரைவில் அவ்வீடுகளும் கையளிக்கப்படவுள்ளன.

921 குடும்பங்கள் நலன்புரி நிலையங்களில் வசிக்கின்றார்கள். 725 வீடுகள் சுமார் 2 லட்சம் நிதியில் திருத்த வேலைகள் செய்யப்பட்டு வருகின்றன.

இந்த வருடம் ஜனவரியில் 700 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டது. மே மற்றும் ஜூன் காலப்பகுதியில் 800 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டமைக்கு இணங்க 1500 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.

Related Posts