Ad Widget

வலி. வடக்கில் உடனடி மீள்குடியேற்றம் இன்றேல் தார்மீக போர் வெடிக்கும்: ம.விஜயகாந்

thellipplai_poraddam_02வலி வடக்கு மக்கள் உடனடியாக மீள்குடியேற்றம் செய்யப்பட வேண்டும் அவ்வாறு செய்யப்படாத பட்சத்தில் தார்மீக போர் வெடிக்கும் என நடைபெறவுள்ள வடமாகாண சபை தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடவுள்ள சுயேட்சைக் குழுவின் முதன்மை வேட்பாளர் மதிமுகராஜா விஜயகாந் தெரிவித்தார்.

யாழ். ஊடக அமையத்தில் நேற்று மதியம் 12.30 மணியளவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், அரசியலை விற்று மக்களை ஏமாற்றுபவர்களை நிராகரிக்க வேண்டுமென்றும், எமது எதிர்கால சந்ததியினர் எதிர்காலத்தில் ஆயுத போராட்டத்தினை ஆயத்தப்பட வேண்டியுள்ளதுடன், அது வரலாற்றில் மறக்க முடியாத ஒன்றாக இருக்குமென்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

அதேவேளை, பட்டத்திற்காகவும், அந்தஸ்திற்காகவும் வடமாகாண சபை தேர்தலில் போட்டியிடவில்லை என்றும், எமது மக்களின் வாழ்வாதாரத்திற்கும், அபிவிருத்திக்காகவுமே போட்டியிடுவதாகவும் அவர் குறிப்பிட்டார். யாழ். மாவட்டத்தில் அதி உயர் பாதுகாப்பு வலயம் என்ற ஒன்று இல்லை என்ற அரசாங்கம் வலி வடக்கில் மக்களை குடியேற்றுவதற்கு தயக்கம் காட்டுவதற்கான காரணம் என்ன என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

இராணுவத்தினர் உடனடியாக யாழ். மாவட்டத்தினை விட்டு வெளியேற வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். அத்துடன், சிறைகளில் வாடும், தமிழ் அரசியல் கைதிகள் நிபந்தனைகளற்ற பொது மன்னிப்புடன் விடுதலை செய்யப்பட வேண்டுமென்றும் வலியுறுத்தியுள்ளார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பினர் அரசியல் லாபத்திற்காக வட பகுதி மக்களை ஏமாற்றுகின்றார்கள். பட்டம், பதவிக்காக மக்களை ஏமாற்றியும், வீர வசனங்களை பேசியும், பொய் வாக்குறுதி அளித்தும் ஏமாற்றுகின்றார்கள். அவ்வாறு அரசியல் லாபத்திற்காகவும், வாக்குகளை பெற்றுக் கொள்வதற்காக வருபவர்களை மக்கள் நிராகரிக்க வேண்டுமென்றும், அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதேவேளை, தேர்தல் திணைக்களத்தில் பொலிஸ் பாதுகாப்பு கோரப்பட்டுள்ள நிலையில், பாதுகாப்பு வழங்க தவறும் பட்சத்தில் நடைபெறும் அனைத்து அச்சுறுத்தல்களுக்கும் அரசும் தேர்தல் திணைக்களமும் பொறுப்பேற்க வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டார்.

நடைபெறவுள்ள வடமாகாண சபை தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், சுயேட்சைக்குழு வேட்பாளர்களான எமக்கு நேரடியான அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், அச்சுறுத்தல்கள் தொடர்பாக தேர்தல் திணைக்களத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், பாதுகாப்பு நடவடிக்கை தொடர்பாக தேர்தல் திணைக்களம் எந்த நடவடிக்கைகளும் இதுவரையில் மேற்கொள்ளவில்லை என்றும் அவ்வாறு பொலிஸ் பாதுகாப்பு வழங்க தவறும் பட்சத்தில், வேட்பாளர்களுக்கு ஏற்படும் அனைத்து அச்சுறுத்தகளுக்கும் அரசும், தேர்தல் திணைக்களமும் பொறுப்பேற்க வேண்டுமென்று அவர் மேலும் கூறினார்.

Related Posts