Ad Widget

வலி. வடக்கில் வீடுகள் இடித்தழிக்கப்படும் நடவடிக்கை நிறுத்தம்?

suntaram-arumainayakam4வலி. வடக்குப் பகுதியில் இராணுவத்தினரால் பொது மக்களின் வீடுகள் இடிக்கப்படுவது நிறுத்தப்பட்டடுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்துள்ளார்.

வலி. வடக்கில் இராணுவத்தினரால் அமைக்கப்பட்டுள்ள நிரந்தரப் பாதுகாப்பு வேலிக்குள் இராணுவத்தினரின் தனிப்பட்ட தேவைகளுக்காக நிரந்தர பாதை அமைக்கும் நடவடிக்கையை இராணுவத்தினர் ஆரம்பித்துள்ளனர்.

இதற்கமைய தொண்டமனாறு முதல் காங்கேசன்துறை வரையான இந்த நிரந்தரப் பாதுகப்பு வேலிக்குள் அமையவுள்ள இராணுவத்தினரின் வீதிக்கு குறுக்காகவுள்ள பொது மக்களது வீடுகளை இடித்து அழித்தனர்.

புல்டோசரின் உதவியுடன் மிகவும் இரகசியமாக இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட இந்நடவடிக்கை அப்பகுதி மக்களுக்கு தெரியவந்ததைத் தொடர்ந்து, குறித்த பிரதேசத்திற்கு அருகில் யாரும் செல்வதற்கு இராணுவத்தினரால் தடை விதிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இராணுவத்தினரின் இத்தகைய அடாத்தான நடவடிக்கையை ஊடகங்கள் வெளிக் கொண்டு வந்திருந்த நிலையில் அப்பகுதி மக்களும் மக்கள் பிரதிநிதிகளும் கடும் எதிர்ப்பைத் தெரிவித்திருந்தனர்.

மேலும் இராணுவத்தினரின் இந் நடவடிக்கை தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர்களும் மேற்படி பிரதேச சபையினரும் இப்பகுதிக்கு நேரடியாகச் சென்று நிலைமைகளைப் பார்வையிட்டனர்

இதனைத் தொடர்ந்து மக்கள் பிரதிநிதிகளும் பொது மக்களும் இவ்விடயம் தொடர்பாக கலந்துரையாடியிருந்தனர். இதற்கமைய எதிர்வரும் 15 ஆம் திகதி உண்ணாவிரதமிருப்பதென அப்பகுதி மீள்குடியேற்றக் குழுவினர் அறிவித்திருந்தனர்.

ஆயினும் இராணுவத்தினரால் வீடுகள் இடிக்கும் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் வீடுகள் இடிக்கும் நடவடிக்கை நிறுத்தப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அரச அதிபர் தெரிவித்துள்ளார்.

யாழ். மாவட்டச் செயலகத்தில் நேற்று இடம்பெற்ற சுதந்திர தின நிகழ்வில் கலந்து கொண்ட யாழ்.அரச அதிபரிடம் வலி. வடக்கில் இரானுவத்தினரால் மேற்கொள்ளப்படுகின்ற இந்நடவடிக்கை தொடர்பாகக் கேட்ட போதே யாழ். அரச அதிபர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

குறிப்பாக இரானுவத்தினரின் தேவைக்கேற்ப வீடுகள் இடித்தழிக்கப்பட்ட நிலையில் குறித்த நடவடிக்கை நிறுத்தப்பட்டு விட்டதா அல்லது யாழ். அரச அதிபர் சம்மந்தப்பட்ட தரப்பினர்களுக்கு தெரியப்படுத்தியதைத் தொடர்ந்து பணிகள் நிறுத்தப்பட்டுள்ளதா என அப்பகுதி மக்கள் வினாத் தொடுத்துள்ளனர்.

Related Posts