வலிகாமம் தென்மேற்கு பிரதேசத்தில் மேற்கொள்ளப்படும் வேலைத்திட்டங்களில் சில வேலைத்திட்டங்களுக்கான வரிப்பணத்தை 2015ஆம் ஆண்டிலிருந்து அதிகரிப்பதற்கு முடிவு செய்துள்ளதாக பிரதேச சபை பதில் தவிசாளர் எஸ்.மகேந்திரன் திங்கட்கிழமை (19) தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,
பிரதேச சபையில் மேற்கொள்ளவேண்டிய அபிவிருத்திப் பணிகளுக்கு அதிகளவு நிதி தேவையென்பதால் இந்த அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வருமானம் குறைந்த பிரதேச சபைகளில் ஒன்றாக எமது பிரதேச சபை காணப்படுகின்றது. போதிய வருமானம் இன்மையால் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யவும், அபிவிருத்தி வேலைத்திட்டங்களை மேற்கொள்ள முடியாமலும் இருக்கின்றது.
கட்டிடம் கட்டுவதற்கான விண்ணப்பப் படிவம், கட்டிட பரிசோதனை, காணிப் பெயர் மாற்றம் உட்பட பல்வேறு வேலைகளுக்கு அறவிடப்படும் வரிப்பணம் கடந்த ஆண்டுகளை விட 2015ஆம் ஆண்டில் அதிகரிக்கப்பட்டுள்ளது. பிரதேச சபையின் உறுப்பினர்களும் இதற்கு சம்மதம் தெரிவித்துள்ளதாக தவிசாளர் கூறினார்.