Ad Widget

வன்புணர்வு சம்பவங்கள் தொடர்பில் முறைப்பாடு செய்ய மாணவர்கள் முன்வர வேண்டும்: அரசாங்க அதிபர்

பாடசாலை மாணவர்களுக்கெதிரான வன்புணர்வுகள் தொடர்பில் மாணவர்கள் முறைப்பாடு செய்ய முன்வர வேண்டுமென்பதுடன், விழிப்புணர்வுகளை அடைய வேண்டுமென யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

யாழ்.மாவட்ட செயலகத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போது, அண்மைக்காலமாக பாடசாலை மாணவிகள் மீதான வன்புணர்வுகள் அதிகரித்து வருகின்றமை தொடர்பாக அரசாங்க அதிபரினால் முன்னெடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் தொடர்பில் கேட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும், பாடசாலைகளில் மாணவிகள் பாலியல் வன்புணர்விற்குட்படுவது தொடர்பான முறைப்பாடுகள் மாவட்ட செயலகத்திற்கு கிடைக்கப்படுவதாகவும், அந்த முறைப்பாடுகள் தொடர்பில் சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

மாவட்ட செயலகத்திற்கு கிடைக்கும் முறைப்பாடுகளின் பிரகாரம், யாழ்.மாவட்ட சிறுவர் அபிவிருத்திக் குழுவினரால் பொலிஸ் நிலையங்களுக்கு அறிவிக்கப்பட்டு பொலிஸாரினால் தகுந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

ஆனால், இவ்வாறான தொந்தரவுகள் தொடர்பில் மாணவர்கள் இரகசியமான முறையில் தமது முறைப்பாடுகளை யாழ்.மாவட்ட செயலகத்தில் முறையிடமுடியும்.

அதற்கு மாணவர்கள் மற்றும் பாடசாலை சமூகத்தினர் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். வன்புணர்வுகள் தொடர்பில் உரிய முறையில் முறைப்பாடுகளை செய்தால், தகுந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுமென்றும், மாணவர்கள் விழிப்புணர்வு அடைய வேண்டுமென்றும் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் மேலும் கேட்டுக்கொண்டுள்ளார்.

Related Posts