Ad Widget

வணக்கஸ்தலங்களை உருவாக்க அமைச்சின் அனுமதி பெறவேண்டும்

நாடளாவிய ரீதியில் போதியளவு வணக்கஸ்தலங்கள் இருக்கின்ற போதிலும் சனத்தொகையின் அதிகரிப்புக்கு ஏற்ப வணக்கஸ்தலங்களை உருவாக்க முடியும். எனினும், தமது அமைச்சின் ஊடாக உரிய முறையில் அனுமதி பெற்றுக்கொள்ளவேண்டும் என்று புத்தசாசன மற்றும் மதவிவகார அமைச்சின் செயலாளர் எம்.கே.பி.திசாநாயக்க தெரிவித்தார்.

இதுதொடர்பில் சுற்றுநிருபமொன்று வெளியிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், எதிர்காலங்களில் அவற்றில் கூறப்பட்டுள்ள சட்டதிட்டங்களுக்கு அமைவாக செயற்பட வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டார்.

சமய செயற்பாடுகள் தொடர்பான முறைப்பாடுகளை விசாரித்து நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு உருவாக்கப்பட்டுள்ள விசேட பொலிஸ் பிரிவின் அங்குரார்ப்பண நிகழ்வின்போது இடம்பெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், இந்த நாட்டில் சமய நல்லிணக்கம் இல்லையென்று எவரும் கூறமுடியாது. மாறாக சிற்சில முரண்பாடுகளே காணப்படுகின்றன. எமது நாட்டில் சுமார் 20 ஆயிரம் வணக்கஸ்தலங்கள் உள்ளன. இவற்றில் 10 ஆயிரம் பௌத்த விகாரைகளும், 5 ஆயிரம் இந்து கோவில்களும், 2500 கிறிஸ்தவ தேவாலயங்களும், 2500 பள்ளிவாசல்களும் உள்ளன.

இவை போதுமானது என்பதே எனது பொதுவான கருத்தாகும். எனினும், குடியிருப்புக்கள் மற்றும் குடிப்பரம்பல்கள் அதிகரிக்கும் பட்சத்தில் அவற்றுக்கு ஏற்றவகையில் புதிதாக வணக்கஸ்தலங்களை உருவாக்க வேண்டி ஏற்படலாம். இது சாதாரண ஒரு விடயமாகும். என்றாலும், அவற்றை சட்டவிதிமுறைகளுக்கு அமைய செய்துகொள்வதே ஏனையவர்களுடன் முரண்பாடுகள் ஏற்படுவதைத் தவிர்க்க முடியும் என்றார்.

தொடர்புடைய செய்தி

மத விவகாரங்கள் தொடர்பில் நீங்களும் முறைப்பாடு செய்யலாம்!

Related Posts