Ad Widget

வட.மாகாண பாதுகாப்பு பிரிவில் தமிழ் இளைஞர்களை இணைக்க வேண்டும் : முதலமைச்சர்

வட. மாகாணத்தில் காணப்படும் பொலிஸ் அதிகாரிகளுக்கான வெற்றிடங்கள் தமிழ் இளைஞர்களை கொண்டு நிரப்பப்பட வேண்டும் என வட. மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வட. மாகாண பிரதி பொலிஸ்மா அதிபர் தலைமையிலான பொலிஸ் அதிகாரிகளுக்கும், முதலமைச்சருக்கும் இடையிலான சந்திப்பு யாழ். கைதடியில் அமைந்துள்ள வட. மாகாண முதலமைச்சரின் அலுவலகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்றது. குறித்த சந்திப்பின் போதே அவர் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.

மேலும், வட. மாகாணத்தில் பொலிஸ் துறையில் சுமார் 500 வெற்றிடங்கள் காணப்படுவதாக தெரிவித்த அவர், இப்பதவிகளுக்கு தமிழ் இளைஞர்கள் முன்வந்து விண்ணப்பிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

அதேவேளை, பொலிஸ் துறையின் உயர் பதவிகளுக்கு பட்டதாரி மாணவர்கள் முன்வந்து விண்ணப்பிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

இன்றைய சந்திப்பில் வட. மாகாண பிரதி பொலிஸ்மா அதிபர் ரொஷான் பெர்ணாண்டோ, யாழ். மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் பாலித பெர்ணாண்டோ மற்றும் யாழ். மாவட்ட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் ஆகியோர் கலந்துக் கொண்டிருந்தனர்.

Related Posts