தமக்கான கொடுப்பனவைக் கோரி, வட மாகாண சபைக்கு உட்பட்ட வைத்தியர்கள், பணிப்புறக்கணிப்புப் போராட்டமொன்றை இன்று (14) முன்னெடுக்கவுள்ளனர்.
இது குறித்து, அரச மருத்துவ அதிகாரிகள் சங்க மத்திய குழு குழு உறுப்பினரும் வடமாகாண இணைப்பாளருமான வைத்தியர் தங்கராஜா காண்டீபன் கருத்துத் தெரிவிக்கையில், “ஏனைய மாகாண சபைகள் அனைத்தும், கொடுப்பனவுகளை வழங்கிய நிலையில், வடமாகாண சபை மட்டுமே இவ்வாறு வங்குரோத்து நிலையில் இருக்குமாயின், அதற்குரிய முழுப் பொறுப்பையும், அதன் வினைத்திறனற்ற அதிகாரிகளே பொறுப்பெடுக்க வேண்டும்.
“அத்தியாவசிய சேவையான சுகாதார சேவைகளையே நடாத்திச் செல்ல முடியாத நிலையில், அதன் அதிகாரிகளின் செயற்பாடுகள் அமைந்திருக்கையில், வடமாகாண அரசியல்வாதிகள், பொலிஸ் சேவை போன்ற சேவைகளையும் தம்மிடம் வழங்குமாறு கோரி நிற்பது நகைப்புக்கிடமாகவே உள்ளது” என்று அவர் குறிப்பிட்டார்.
தமது பணிப்புறக்கணிப்புக் காரணமாகப் பாதிப்பு உள்ளாகும் நோயாளர்களிடம் மன்னிப்புக் கோருவதாகத் தெரிவித்த அவர், அவசர சேவைகள், வழமைபோன்று தமது சங்க உறுப்பினர்களால் வழங்கப்படுமெனவும் உறுதியளித்தார்.