வட. மாகாண ஆசிரியர்களுக்கான பணித்தடை உத்தரவு, ஜனநாயகத்தை நசுக்கும் செயற்பாடு: ஆசிரியர் சங்கம்

வெளி மாவட்டங்களில் பணியாற்றும் தங்களுக்கு இடமாற்றம் பெற்றுத்தருமாறு கோரி ஆர்ப்பாட்டம் நடத்திய வடக்கு மாகாண ஆசிரியர்களுக்கு வடக்கு மாகாண கல்விப் பணிப்பாளரால் பணித்தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமையானது ஜனநாயகத்தை நசுக்கும் செயற்பாடாகுமென இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமக்கான இடமாற்றத்ததை வலியுறுத்தியும் சில ஆசிரியர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள பணித்தடையை விலக்குமாறு கோரியும் வடக்கு மாகாண முதலமைச்சர் அலுவலகத்திற்கு முன்பாக இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட போதே அவர் மேற்குறித்தவாறு தெரிவித்தார்.

ஆட்சி மாற்றத்தின் பின்னர் இலங்கையின் பல பாகங்களிலும் ஜனநாயக ரீதியான போராட்டங்கள் இடம்பெற்று வருகின்ற நிலையில், வடக்கு மாகாண ஆசிரியர்களுக்கு மாத்திரம் பணித்தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதை வன்மையாக கண்டிப்பதாக ஜோசப் ஸ்டாலின் மேலும் தெரிவித்தார்.

அத்தோடு, வடக்கு மாகாண கல்வித் திணைக்களத்தால் தொடர்ந்தும் பாரபட்சமாகவே இடமாற்றங்கள் அமுல்படுத்தப்பட்டு வருவதாக தெரிவித்த ஜோசப் ஸ்டாலின், இவ்வருடத்திற்குரிய இடமாற்றமும் நீதியான முறையில் அமுல்படுத்தப்படவில்லையென சுட்டிக்காட்டினார்.

Related Posts