Ad Widget

வட மாகாணத்தினுள் உட்பிரவேசிக்கும் வாகனச் சாரதிகளுக்கு புதிய அறிவித்தல்

வட மாகாண நுழைவாயிலினூடாக ஏ – 9 வீதியில் பயணிக்கும் வாகனச் சாரதிகளுக்கான புதிய அறிவித்தலொன்றை வட மாகாணத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் காமினி சில்வா வெளியிட்டுள்ளார்.ஏ – 9 பிரதான வீதி புனரமைக்கப்பட்டு வருவதால் ஓமந்தையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணிக்கும் சாரதிகளுக்கே இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது என பொலிஸ் ஊடக பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சருமான அஜித் ரோஹன தெரிவித்தார்.

இதேவேளை, மேற்படி புதிய அறிவித்தல் தொடர்பான ஆலோசனைப் பத்திரமொன்றையும் ஓமந்தை சோதனைச்சாவடியில் வைத்து சாரதிகளுக்கு விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் பேச்சாளர் மேலும் கூறினார்.

மேற்படி ஆலோசனைப் பத்திரத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள் பின்வருமாறு,

“தற்போது தீவின் வடமாகாணத்தின் நுழைவாயிலூடாக நீங்கள் ஏ – 9 வீதிக்குப் பிரவேசித்துள்ளீர்கள். உங்களால் ஏ – 9 வீதியூடாக வாகனத்தைச் செலுத்துகையில் ஒரு ஒழுக்கமான சாரதியாக பின்வரும் அறிவுறுத்தல்களுக்கு அமைய கவனமாக நடந்துகொள்ள வேண்டுமென கேட்கப்படுகின்றீர்கள்.

1. ஓமந்தையிலிருந்து யாழ்ப்பாணக் குடாநாடு வரையான வீதிகளில் திருத்தவேலைகள் நடைபெறுவதால் தயவுசெய்து உங்கள் வாகனம் செலுத்தும் வேகத்தைக் குறைக்கவும். வேகமாக வாகனத்தைச் செலுத்த வேண்டாம்.

2. அவசரமான நிலைமைகளில் வாகனத்தைக் கட்டுப்படுத்தும் அளவிற்கு அத்துடன் வாகனத்தில் பயணிகள் மற்றும் பாதசாரிகள் அதேபோன்று அவர்களின் சொத்துக்களின் பாதுகாப்பு பற்றி கருத்திற்கொண்டும் விவேகமான முறையில் வாகனத்தைச் செலுத்த வேண்டும்.

3. நீங்கள் மதுபானம் உட்கொண்டிருந்தால் அல்லது ஏதேனும் நோயினால் பாதிக்கப்பட்டிருந்தால் அது வாகன செலுத்தலை நேரடியாகப் பாதிக்கும். அதனால் அந்நிலைமைகளில் வாகனம் செலுத்துவதை தவிர்க்கவும்.

4. ஏ – 9 வீதியின் இருமருங்கிலும் அடர்ந்த மரங்கள் காணப்படுவதால் இப்பிரதேசங்களில் விலங்குகளின் நடமாட்டம் அதிகமாகக் காணப்படும். அதனால், விலங்குகளுக்கு தீங்கு விளைவிக்காமல் கவனமாக வாகனத்தைச் செலுத்த வேண்டும்.

5. ஓமந்தையிலிருந்து யாழ்ப்பாணம் வரையான வீதி, மிக வேகமான ஒரு அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் உள்ளது. அதனால் புனரமைப்புப் பணிகளும் மிக வேகமாக இடம்பெற்று வருகின்றன. எனவே, வாகனத்தைச் செலுத்தும் போது வீதியின் நிர்மாணச் செயற்பாடுகள் மீது கவனம் செலுத்த வேண்டும்.

6. வீதி நிர்மாண செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ள நபர்களின் பாதுகாப்பை கவனத்திற்கொள்ளுதல் வேண்டும். அத்துடன், அறிவுறுத்தல் பலகைகள் மற்றும் சைகைப் பலகைகள் மீது காட்சிப்படுத்தப்பட்டுள்ள அறிவுறுத்தல்களைத் தயவுசெய்து பின்பற்றுதல் வேண்டும்.

7. விதிகளை மீறுகின்ற மற்றும் சட்டத்துக்கு இணங்க அறிவுறுத்தல்களைப் பின்பற்றாத சாரதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்.

மேற்படி அறிவுறுத்தல்களைக் கடைபிடிக்கின்ற சிறந்த சாரதிகள் பொறுமை, கீழ்ப்படிவு மற்றும் பணிவன்பு ஆகிய பண்புகளைப் பிரதிபலிக்கின்ற சாரதிகள் மிகவும் வரவேற்கப்படுகின்றனர்’ என அவ்வாலோசனைப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன.

Related Posts