Ad Widget

வட, கிழக்கு மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்த புலம்பெயர் தமிழர்கள் முயற்சி

tnaவடக்கு, கிழக்கு மாகாண மக்களின் பொருளாதாரத்தினை முன்னேற்ற புலம்பெயர் தமிழர்கள் பல முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் சர்வதேச ஊடக பேச்சாளர் ஐ.பி.சம்பந்தர் நேற்று (11) தெரிவித்தார்.

யாழ். ஊடக அமையத்தில் நேற்று(11) நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

‘தமிழ் மக்களின் பொருளாதாரத்தினையும், பொருளாதார வளர்ச்சியையும், வளப்படுத்தி எமது தமிழ் மக்களின் நல்வாழ்விற்காக பொருளாதார ரீதியில் அமைப்பினை உருவாக்கி முன்னெடுக்க வேண்டும்.

எமது பிரதேசங்களின் பொருளாதாரம் பல காலமாக வீழ்ச்சியடைந்து மக்கள் பல துன்பங்களுடன் வாழ்கின்ற காலகட்டத்தில் இந்த மாகாண சபை ஊடாக எமது மக்களின் வாழ்வியலை மேம்படுத்தி கொடுக்கக் கூடிய சூழ்நிலை உருவாக்க வேண்டும்.

வடமாகாணசபை மக்களின் வாழ்வியலை மேம்படுத்துவதற்கான திட்டத்தினை கொண்டு செயற்படுத்த வேண்டிய நிலையில் இருக்க வேண்டும்.

புலம்பெயர் மக்களிடம் இருக்கும் சக்திகளை, பொருளாதார ரீதியாக இருக்கும் சக்திகளை பயன்படுத்துதல் வேண்டும். அதற்கான ஒரு ஆலோசனையினையும் புலம்பெயர் தமிழர்களுடன் நடத்தியிருப்பதாக அவர் கூறினார்.

தமிழர்களிடமிருக்கும் உணர்வுகள், உற்சாகம் வரவேற்கத்தக்கதாக இருக்கின்றது. புலம்பெயர் தமிழர்களும் அதனை ஒரு அரிய சந்தர்ப்பமாக கருதுகின்றார்கள். மாகாண சபையின் ஊடாக பொருளாதார ரீதியாக மக்களின் வாழ்வை மேம்படுத்தலாம் என்ற சிந்தனையுடன் புலம்பெயர் தமிழர்கள் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். அவர்களின் திட்டத்தினை உணர்ந்து செயற்பட வேண்டும்.

புலம்பெயர் தமிழர்கள் வடக்கு, கிழக்கு பொருளாதார அபிவிருத்திக் குழு ஒன்றினை உருவாக்கியுள்ளார்கள். வடமாகாண சபையின் ஒத்துழைப்பு கிடைக்கும் பட்சத்தில், புலம்பெயர் தமிழர்களின் உதவியுடன் பொருளாதார வளர்ச்சியினை அதிகரித்துக்கொள்ள முடியும்.

அந்தவகையில், தான் வடமாகாண முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களுடன் சந்தித்து கலந்துரையாடி வருகின்றதாகவும், வடமாகாண அமைச்சர்கள் தமிழ் மக்களின் பொருளாதாரத்தை உயர்த்துவதற்கு எண்ணம் கொண்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Related Posts