Ad Widget

வடமாகாணத்திற்கான பொருளாதார மத்திய நிலையம் ஒமந்தையில்

வடமாகாணத்திற்கான பொருளாதார மத்திய நிலையம் ஒமந்தையில் அமைக்கப்பட வேண்டும் என தமிழ் மக்கள் பேரவை தீர்மானம் மேற்கொண்டுள்ளது.

வடக்கிற்கான பொருளாதார மத்திய நிலையம் அமைப்பதில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் குறித்து தமிழ் மக்கள் பேரவையின் சமூக, பொருளாதார வலுவூட்டலிற்கான உபகுழுவின் ஏற்பாட்டில் நேற்று வியாழக்கிழமை மாலை யாழ்ப்பாணத்தில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

இந்த கலந்துரையாடலில் வடமாகாணத்திற்கான பொருளாதார மத்திய நிலையம் வவுனியாவிலிருந்து வடக்கு நோக்கியதாக முல்லைத்தீவு வவுனியா மாவட்ட விழிம்பில் அமைக்கப்பட வேண்டும்.

இதனால் பொருளாதார மத்திய நிலையம் ஓமந்தையில் அமைக்கப்படுவதுடன், அதனை எதிர்காலத்தில் அபிவிருத்தி செய்வதற்கான நிலப்பிரதேசம் ஒமந்தையில் காணப்படுவதாகவும் தமிழ் மக்கள் பேரவை சுட்டிக்காட்டியுள்ளது.

எனவே வடபகுதி மக்களின் சமூக, பொருளாதார, அரசியல் நன்மை கருதி பொருளாதார மத்திய நிலையத்தை ஓமந்தையில் அமைப்பதற்கு அனைத்து தமிழ் அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென அந்த பேரவை கேட்டுக்கொண்டுள்ளது.

அத்துடன், பொருளாதார மத்திய நிலையத்தின் அமைவிடத்தை வாக்கெடுப்பின் மூலம் தீர்மானிப்பது ஆரோக்கியமான விடயம் அல்ல எனவும் அது அறிவு பூர்வமாக அணுகப்பட வேண்டியது எனவும் தமிழ் மக்கள் பேரவையின் சமூக, பொருளாதார வலுவூட்டலிற்கான உபகுழுவின் தெரிவித்துள்ளது.

இதேவேளை, வட மாகாணத்திற்கான பொருளாதார மத்திய நிலையத்தை எங்கு அமைப்பது என்பது தொடர்பில் வட மாகாண சபைக்கும் மத்திய அமைச்சின் கிராமிய பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பீ ஹரிசன் வர்த்தக வாணிப கைத்தொழில் அமைச்சர் ரிஷாட் பதியூதீன் ஆகியோர் தலைமையிலான மத்திய அரசின் பிரதிநிதிகளுக்கும் இடையில் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன.

அமைச்சர் பீ ஹரிசன். குறித்த மத்திய நிலையத்தை மதவாச்சிக்கு கொண்டு செல்ல சதிசெய்துவருவதாக பகிரங்கமாக குற்றஞ்சாட்டிய வட மாகாண முதலமைச்சர், குறைந்த பட்சம் தாண்டிக்குளத்திலாவது அமைத்துவிடலாம் என்பதற்காகவே இந்த இணக்கத்தை தெரிவித்திருந்தார்.

பொருளாதார மத்திய நிலையத்தை அமைப்பதற்கான இடத்தை தெரிவுசெய்வது தொடர்பில் நியமிக்கப்பட்ட ஆய்வு குழுவின் பரிந்துரைக்கு அமைய ஓமந்தையில் அமைப்பதே சிறந்தது என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதற்கமைய வட மாகாண சபையும் ஓமந்தையில் மத்திய நிலையத்தை அமைப்பதற்கு விருப்பம் தெரிவித்திருந்தது.

ஆனால் ஒமந்தையில் மத்திய நிலையத்தை அமைப்பதற்கு மத்திய அமைச்சர்கள் இருவரும் தொடர்ச்சியாக வெளியிட்டுவரும் எதிர்ப்பை அடுத்தே தாண்டிக்குளத்தில் அதனை அமைப்பதற்கு வட மாகாண சபை இணக்கம் வெளியிட்டிருந்தது.

இந்த நிலையில் மக்கள் அதற்கு தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளதுடன், ஓமந்தையில் மத்திய நிலையத்தை அமைக்குமாறு வலியுறுத்தியுள்ளனர்.

எனினும் பொருளாதார மத்திய நிலையத்தை ஒமந்தையில் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் பிரதமர் ரணில் விக்கரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்தார்.

இந்நிலையில் வடக்கிற்கான பொருளாதார மத்திய நிலையம் எங்கு அமைக்கப்பட வேண்டும் என்பது தொடர்பாக கடந்த ஞாயிற்றுக்கிழமை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற மற்றும் வடமாகாண சபை உறுப்பினர்களுக்கு இடையில் கலந்துரையாடல் இடம்பெற்றது.

இதன்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற மற்றும் வடமாகாண சபை உறுப்பினர்களின் கருத்துக்களை பெற்று இறுதி தீர்மானம் மேற்கொள்ளப்படும் என தீர்மானம் எட்டப்பட்டிருந்த நிலையிலேயே வடக்கிற்கான பொருளாதார மத்திய நிலையம் ஒமந்தையில் அமைக்கப்பட வேண்டும் என தமிழ் மக்கள் பேரவை தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

Related Posts