Ad Widget

வடமாகாணசபையின் கோரிக்கையை நிறைவேற்ற மதுவரித் திணைக்கள ஆணையாளர் நடவடிக்கை

வடமாகாணசபையின் கோரிக்கையை நிறைவேற்ற மதுவரித் திணைக்கள ஆணையாளர் உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக வட மாகாண சபை அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த 09ஆம் திகதி வடமாகாண எல்லைக்குள் சட்டவிரோதமாக இயங்கும் மதுபானசாலைகளை மூடவேண்டும் எனவும் ஆலயங்கள், பாடசாலைகள், பொதுநிறுவனங்கள் போன்ற இடங்களுக்கு அருகாமையில் இயங்கும் மதுபான நிலையங்களுக்கான அனுமதியை மீளாய்வு செய்ய வேண்டும், புதிய அனுமதிப்பத்திரங்கள் வழங்ககூடாது என்ற தீர்மானம் வடமாகாணசபையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

இது தொடர்பாக கடந்த 10ஆம் திகதி நிதி அமைச்சருக்கு முகவரியிட்டு மதுவரித்திணைக்கள ஆணையாளருக்கு தீர்மானத்தின் பிரதியை அனுப்பியிருந்தேன்.

இந்நிலையில் கடந்த 19 ஆம் திகதி குறிப்பிட்ட விடயம் சம்பந்தமாக உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் சட்ட விதிகளுக்கு முரணாக இயங்கும் மதுபானசாலைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு இருந்தால் விசாரணைகள் இடம்பெறும் எனவும் எதிர்காலத்தில் யாழ்ப்பாணத்தில் மதுபானசாலைகளுக்கு புதிய அரசாங்கத்தின் கொள்கைக்கு ஏற்ப அனுமதிகள் வழங்கப்படமாட்டாது எனவும் மதுவரித்திணைக்கள ஆணையாளர் கடிதம் அனுப்பியுள்ளார் என தெரிவித்தார்.

Related Posts