வடமராட்சி கிழக்கில் சட்டவிரோத தொழில் செயற்பாடுகள் அதிகரித்துள்ளமையினால் பாரிய பிரச்சனைகள் ஏற்படக் கூடிய வாய்ப்பு உருவாகியுள்ளதாக மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
குறித்த ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் வடமராட்சியில் இடம்பெற்று வருகின்ற சட்டவிரோத தொழில் நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. இதன்போது வடமராட்சி கிழக்கில் இடம்பெறுகின்ற சட்டவிரோத தொழில் நடவடிக்கைகள் குறித்து இதுவரையில் எந்தவிதமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லையென சிவாஜிலிங்கம் சுட்டிக்காட்டினார்.
மேலும் இப்பிரச்சனையை விரைவாகத் தீர்க்க வேண்டுமென்று வலிறுத்திய அவர், கலகம் வந்த பின்னர் ஊரடங்கு தேவையில்லை எனவும் குறிப்பிட்டார்.
அத்துடன் இவ்விடயத்தில் தெற்கிலுள்ளவர்கள் தொடர்ந்தும் நடவடிக்கை எடுக்காது தாமதித்து வருவதாகவும் சிவாஜிலிங்கம் குற்றஞ்சாட்டினார்.
இதனைத் தொடர்ந்து சிவாஜிலிங்கத்தின் கருத்துக்கு பதிலளித்த மருதங்கேணி பிரதேச செயலாளர், குறித்த பகுதியில் அனுமதியில்லாமல் தொழிலில் ஈடுபட்டு வருவது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளதாகவும் நீதிமன்றத் தீர்ப்பு விரைவில் வெளிவர உள்ளதாகவும் குறிப்பிட்டார்.