Ad Widget

வடபகுதி மீனவர் பிரச்சினைகள் குறித்து கூட்டமைப்பினர் என்றும் குரல் கொடுத்ததில்லை

இந்திய மீனவர்கள் சட்டவிரோதமாக எமது கடற் பிரதேசத்தினுள் நுழைந்து மீன்பிடிப்பது தொடர்பாக நாம் ஆரம்பம் முதல் குரல் கொடுத்து வருகிறோம்.

KN-daklas

ஆனால் இந்திய மீனவர்களினால் வடபகுதி மீனவர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒருபோதும் குரல் கொடுத்தது கிடையாது என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்தார்.

கடற்றொழில் நீர்வாழ் உயிரின வளங்கள் (திருத்தச்) சட்டமூலம் தொடர்பான விவாதத்தில் உரையாற்றிய அமைச்சர் மேலும் கூறியதாவது:-

இந்திய மீனவர்கள் எமது கடற் பரப்பிற்குள் சட்டவிரோதமாக வந்து மீன் பிடிப்பதினால் வடபகுதி மீனவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். இது தவிர தடுக்கப்பட்ட முறைகளைப் பயன்படுத்தி இந்திய மீனவர்கள் மீன் பிடிப்பதனால் நீரியல் வளங்கள் சேதமடைகின்றன. இவற்றினால் வடபகுதி மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது.

இந்த விவகாரம் குறித்து இலங்கையில் மட்டுமன்றி சர்வதேச ரீதியில் நாம் குரல் கொடுத்து வருகிறோம். மீன்பிடி அமைச்சர், ஜனாதிபதி ஆகியோருடனும் வடபகுதி மீனவர்களின் பிரச்சினையை முன்வைத்துள்ளோம். இந்திய பிரதமர், தமிழக முதலமைச்சர் ஆகியோருக்கும் இது தொடர்பில் கடிதம் எழுதியுள்ளோம்.

வடபகுதி மீனவர்களின் பிரச்சினை குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒருபோதும் குரல் கொடுத்தது கிடையாது ஆனால் நானும் எனது கட்சியும் ஆரம்ப முதல் அவர்களுக்காக குரல் கொடுத்து வருகிறோம்.

ஐ. தே. க. தலைவராக வர எதிர்பார்க்கும் சஜித் பிரேமதாஸ எம்.பி. எமது கட்சி குறித்து சபையில் தவறான பல குற்றச்சாட்டுகளை அடுக்கியுள்ளார். இவரைப் போன்றே இவரது தந்தை பிரேமதாஸவும் எம்மீது குற்றச்சாட்டுகள் சுமத்தியிருந்தார். டென்சில் கொப்பேகடுவவை கொலை செய்வதற்கு பிரேமதாஸ எமது கட்சிக்கு பொறுப்பு வழங்கியிருந்ததாக சிங்கள பத்திரிகையொன்றில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்தக் குற்றச்சாட்டை சஜித் பிரேமதாசா ஏற்றுக்கொள்கிறாரா? 1994 பொதுத் தேர்தலுக்கு முன் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க கொலை முயற்சி ரவிராஜ், மகேஸ்வரன் கொலை என்பன தொடர்பான குற்றச்சாட்டுகளும் எம்மீது சுமத்தப்படுகிறது. பல வருடங்கள் கடந்தாலும் இன்றுவரை இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பில் எந்த ஆதாரமாவது முன்வைக்கப்பட்டுள்ளதா?

கடந்த வட மாகாண சபைத் தேர்தலின் போது இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பிலும் ஈ.பி.டி.பி. மீது சஜித் எம்.பி. குற்றஞ் சுமத்தியுள்ளார். இவற்றுடன் எமக்கு தொடர்பு கிடையாது.

என் மீதும் எமது கட்சி மீதும் சேறு பூசுவதற்காக எனது அரசியல் எதிராளிகள் திட்டமிட்டு கட்டவீழ்த்த குற்றச்சாட்டுக்களே இவை.

எமது சமூகத்திற்கு சேவையாற்றுவதற்காகவே ஆட்சியிலுள்ள அரசுகளுடன் நாம் இணைந்து செயற்பட்டு வருகிறோம்.

என்னை கொலை செய்யுங்கள். ஆனால் எனது நற்பெயரை கொன்றுவிடாதீர்கள் என்ற பிரேமதாஸவின் கூற்றையே நானும் கூற விரும்புகிறேன்.

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடபகுதி மீனவர்களின் குறைபாடுகளை தீர்க்க நடவடிக்கை எடுக்குமாறு கோருகிறேன். யாழ்ப்பாணத்தில் 40 பல நாள் மீன் பிடிப்படகுகள் உள்ளன.

அவர்களுக்கு சர்வதேச கடற்பரப்பில் மீன்பிடிப்பதற்கு தேவையான வசதிகளை பெற்றுக் கொடுக்க வேண்டும். மாதகல், பருத்தித்துறை மற்றும் இன்பசிட்டி ஆகிய இடங்களில் மீன்பிடித் துறைமுகங்கள் அமைக்கப்பட வேண்டும்.

இது தவிர மையிட்டி, பலாலி ஆகிய இடங்களில் மக்களை மீள்குடியேற்ற நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதியை கோருகிறேன். இங்கு மீனவர்களே அதிகம் வாழ்ந்தனர்.

இந்த சட்டதிருத்தங்கள் மூலமாக எமது கடற்பரப்பில் சட்ட விரோதமாக மீன்பிடிப்பது தடுக்கப்படும் என நம்புகிறேன் என்றார்.

Related Posts