Ad Widget

வடபகுதி மக்களுக்கு ஜனாதிபதி மஹிந்த ஒருபோதும் தீர்வு பெற்றுக் கொடுக்கமாட்டார்!

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ ஆட்சியிலிருக்கும் வரை வடபகுதி மக்கள் அதிகாரப் பகிர்வை எதிர்பார்க்க முடியாது என முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்தின இந்து நாளிதழுக்குத் தெரிவித்துள்ளார்.

rajitha sena

இந்தியா ஒரு ஜனநாயக நாடு, ஆனால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ சர்வாதிகார மனோநிலையில் இருக்கிறார். எனவே இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையே பெரும் இடைவெளியுள்ளது. இதன் காரணமாக இரு நாடுகளுக்கும் இடையில் தற்போது உறவு இருக்க கூடாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மஹிந்த, வடபகுதி மக்களுக்கு எதையும் வழங்க விரும்பவில்லை. அப்பகுதியில் இடம்பெறுகின்ற அபிவிருத்தி நடவடிக்கைகளின் நோக்கம் தரகுப்பணத்தை பெறுவதே. அந்த அபிவிருத்தி திட்டங்களால் மக்களுக்கு நன்மை கிட்டவில்லை வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படவில்லை.

மஹிந்த அரசின் இத்தகைய நடவடிக்கைகளை அரசிலிருக்கும்போதே சுட்டிக்காட்டிவந்தேன். அவர்கள் எமது கருத்துக்களை ஏற்றுக்கொள்ளவில்லை. அரசியல், சமூக சீர்திருத்த நடவடிக்கைகள் நடைமுறைப்படுத்தப்படுவதை உறுதிசெய்வதற்கு நான் முயன்றேன். ஆனால் ஜனாதிபதி இவை எவற்றிற்கும் தயாராயில்லை. இந்த நிலையிலேயே நான் அரசாங்கத்திலிருந்து வெளியேறினேன்.

சிறிலங்கா சுதந்திரக்கட்சியிலுள்ள மூத்த உறுப்பினர்கள் அரசியல் சீர்திருத்தம், நிறைவேற்று அதிகார முறை ஒழிப்பு , தமிழ்மக்கள் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு உட்பட பல விடயங்களை நடைமுறைப்படுத்துமாறு ஜனாதிபதியை பல தடவை கேட்டுள்ளனர். அவர்களில் நானும் ஒருவர். அப்போது அவர் வாக்குறுதியளித்தார். ஆனால் பின்னர் அதனை அவர் நிறைவேற்றவில்லை. அதன் பின்னரே இந்த அரசாங்கத்திடமிருந்து எதனையும் எதிர்பார்க்கமுடியாது. நாமே செயற்படவேண்டியதுதான் என தீர்மானித்தேன். ராஜபக்‌ஷ அரசாங்கம் இனங்களுக்கிடையில் மோதலை ஊக்குவித்து வந்துள்ளது.

தேர்தலுக்காக சிங்கள பௌத்த அமைப்புகளின் ஆதரவை அது பெற்றுள்ளது. அளுத்கம சம்பவத்திற்கு காரணமானவர்களுக்கு எதிராக நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. கடந்த 40 வருட காலமாக எனது சகாவாகவும், தோழராகவும் விளங்கிய மஹிந்த ராஜபக்‌ஷ முன்னர் அற்புதமான மனிதராகக் காணப்பட்டார். எனினும் 2009இற்குப் பின்னர் அவர் தனது குடும்பத்தவர்களின் விருப்பத்தின்படி நடப்பவராகிவிட்டார்.

முக்கிய பதவியிலிருக்கும் அவரது சகோதரர்களுக்கு அப்பால் பல கையாட்கள் உள்ளனர். சிலர் அவரை பாராட்டி மன்னர், சக்கரவர்த்தி என்கின்றனர். இவற்றையே மஹிந்தவும் நம்புகின்றார். வரவு செலவுதிட்டத்தில் 70 சதவீதத்தினை குடும்ப உறுப்பினர்களுக்கே ஒதுக்கியுள்ள மஹிந்த, ஏனைய 28 வீதத்தையே முக்கிய அமைச்சுகளுக்கு ஒதுக்கியுள்ளார். அந்த நிதியை பெறுவதற்காக கூட மூத்த அமைச்சர்கள் பஸில் ராஜபக்‌ஷவின் பின்னால் ஓட வேண்டியுள்ளது.- என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Posts