Ad Widget

வடக்கையும் கிழக்கையும் இணைக்க வேண்டியது அவசியம்! – ஆனந்த சங்கரி

தமிழகத்தில் வாழும் தமிழ் மக்களுக்கு என்னென்ன அதிகாரங்கள் வழங்கப்பட்டிருக்கின்றனவோ, அத்தகைய அதிகாரங்களை இந்தியா இலங்கைத் தமிழர்களுக்குப் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்று தமிழர் விடுதலைக் கூட்டணி கோரியிருக்கின்றது.

´´இத்தகைய அதிகாரப் பரவலாக்கல் தொடர்பில் எவரும் குறை கூற முடியாது. அதேநேரம் இவ்வாறு அதிகாரங்கள் பகிரந்தளிக்கப்படுவதை அனைவரும் ஏற்றுக் கொள்வார்கள்´´ என்று தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் ஆனந்த சங்கரி செய்தியாளர்களிடம் நம்பிக்கை வெளியிட்டார்.

தமிழர் விடுதலைக் கூட்டணி தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டபோதே, அதிகாரப் பகிர்வு தொடர்பில் தமது நிலைப்பாடு என்ன என்பது குறித்து அவர் தெரிவித்தார்.

தமிழர் விடுதலைக் கூட்டணி வடக்கில் யாழ்ப்பாணம், வன்னி, ஆகிய இரு தேர்தல் மாவட்டங்களிலும், கிழக்கில் அம்பாறை தவிர்ந்த திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும், கொழும்பிலும் இம்முறை தனது வேட்பாளர்களை நிறுத்தியிருக்கின்றது.

கூட்டணியினால் ஒன்றிரண்டு ஆசனங்களைக் கொழும்பில் பெற முடியும் என்று அங்குள்ளவர்கள் அழைத்ததன் பேரிலேயே அங்கு இம்முறை போட்டியிடுவதற்கு முடிவெடுத்திருப்பதாக தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் ஆனந்த சங்கரி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

வடக்கையும் கிழக்கையும் இணைக்க வேண்டியது அவசியம் எனக் கூறிய ஆனந்த சங்கரி, இந்த இரண்டு மாகாணங்களையும் மூன்றாகப் பிரித்து, அவற்றில் ஒன்றை முஸ்லிம்களுக்கு வழங்குவதுடன் மிஞ்சிய பகுதியை ஒன்றாக இணைக்க வேண்டும் என குறிப்பிட்டார்.

கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் மக்களுடன் தமிழர்கள் இணைந்து, ஒற்றுமையாக வாழ வேண்டும் என்றும் ஆனந்த சங்கரி தெரிவித்தார்.

அதேவேளை, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க முன்வைத்திருந்த அரசியல் தீர்வுக்கான ஆலோசனைகளின் அடிப்படையில் இனப்பிரச்சினைக்குத் தீரவு காண்பதே நல்லது என்றும் ஆனந்த சங்கரி கூறுகின்றார்.

Related Posts